`உள்துறை, நிதித்துறை' சேர்த்து கேட்கும் ஷிண்டே; அமித் ஷாவுடன் பட்னாவிஸ், அஜித்பவ...
கும்மிடிப்பூண்டி ரயில் விபத்துக்கும் "கவச்' தொழில்நுட்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: டி.ஆர். பாலுக்கு ரயில்வே அமைச்சர் பதில்
நமது சிறப்பு நிருபர்
கும்மிடிப்பூண்டி ரயில் விபத்துக்கும் "கவச்' தொழில்நுட்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதைத் தவிர்க்கும் "கவாச்' தொழில்நுட்பத்தை தெற்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் ஓடும் ரயில்களில் அறிமுகப்படுத்தாததே கும்மிடிப்பூண்டியில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த ரயில் விபத்துக்கு காரணமா என்றும் எப்போது அந்தத் தொழில்நுட்பம் தெற்கு ரயில்வேயில் அறிமுகமாகும் என்றும் மக்களவையில் திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு கேட்டிருந்தார்.
இதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை அளித்துள்ள எழுத்துபூர்வ பதில் வருமாறு:
ரயில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் மேம்படுத்தப்பட்டதுதான் "கவச்' தொழில்நுட்பம். மிக மோசமான வானிலை காலங்களில் கூட ரயில்களின் வேகத்தைக் குறைக்கவும் ரயில் ஓட்டுநர் பிரேக் பயன்படுத்த தாமதிக்கும்போது தானியங்கியாக அத்தொழில்நுட்பம் ரயிலை நிறுத்தும் வசதியைப் பெற்றுள்ளது.
இந்தத் திட்டம் அறிமுகமாகும் பாதையில் சிறப்பு அலைவரிசை டேக்குகள், ஆப்டிக் ஃபைபர் கேபிள்கள், ஒவ்வொரு ரயிலிலும் "கவச்' தொழில்நுட்பம் போன்றவற்றை நிறுவ வேண்டும். கடந்த அக்டோபர் நிலவரப்படி 5,116 கி.மீ. தொலைவுக்கான ஆப்டிக் ஃபைபர் கேபிள் செப்பணிடும் பணி, 538 தொலைத்தொடர்பு கோபுரங்கள், 687 ரயில்களில் "கவச்' தொழில்நுட்பம், 3,413 கி.மீ. தொலைவு ரயில் பாதையில் தண்டவாளத்துடன் இணைக்கப்படும் சாதனம் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன.
ரயில் விபத்துகள் பற்றிய விசாரணையை விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள ரயில்வே பாதுகாப்பு ஆணையம் மேற்கொள்வதால், அனைத்து ரயில் விபத்துகள் குறித்தும் அந்த ஆணையம் விசாரித்து அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று அமைச்சர் கூறியுள்ளார்.