அதிமுக சாா்பில் 50 மாணவிகளுக்கு வைப்புத்தொகை திட்டம் தொடக்கம்
மாநில அரசு மனது வைத்தால் நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாகும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்
மாநில அரசு மனது வைத்தால் நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாகும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்தார்.
பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, தினமணி சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சுதந்திரப் போராட்ட வீரரும், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான தியாகி லட்சுமிகாந்தன் பாரதிக்கு மகாகவி பாரதியார் விருது வழங்கிப் பேசியதாவது:
மிகச் சிறந்த நிறுவனமான தினமணி சார்பில், மிகப் பெரிய மனிதரான லட்சுமிகாந்தன் பாரதிக்கு மகாகவி பாரதியார் விருது வழங்கப்படுவது பெருமைக்குரியது. நலமாக வாழ வேண்டுமெனில், நகைச்சுவை உணர்வு அவசியம் என்பதை லட்சுமிகாந்தன் பாரதியின் வாழ்வியலில் இருந்து நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும்.
எங்கும் தமிழ் ஒலிக்க வேண்டும் என்று விரும்பிய மகாகவி பாரதியார், தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் வழக்கு விசாரணைகளையும், தீர்ப்புகளையும் கண்டால் அவரது எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும் என்பது நாம் அனைவரும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.
தமிழகத்தில் தமிழே ஆட்சி மொழியாக இருக்கும் என 1956-இல் சட்டம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், நீதிமன்ற அலுவல் மொழி ஆங்கிலமாகவே இருந்தது. 1975-இல் சில பிரிவுகள் சேர்க்கப்பட்டு, நீதிமன்றத்தில் தமிழைப் பின்பற்ற வழிவகை செய்யப்பட்டது. இருப்பினும், எப்போதிலிருந்து நடைமுறைக்கு வரும் என்ற தேதியை முடிவு செய்யும் பொறுப்பு அரசிடம் விடப்பட்டது.
இந்த நிலையில், 1975-இல் ராமநாதபுரம் உரிமையியல் நீதிமன்ற முன்சீப் ஒருவர் தமிழில் தீர்ப்பு எழுதினார். அந்தத் தீர்ப்பு, சென்னை உயர்நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, தமிழில் எழுதப்பட்ட இந்தத் தீர்ப்பு ஒரு குப்பை காகிதம் என உயர்நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது. பிறகு, சில அரசாணைகள் வெளியிடப்பட்டு, விசாரணை நீதிமன்றங்களில் தமிழைப் பின்பற்றலாம் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 1994-இல் விசாரணை நீதிமன்றங்களில் தீர்ப்பை தமிழில் எழுதுவதும், ஆங்கிலத்தில் எழுதுவதும் அந்தந்த நீதிபதிகளின் விருப்பத்தைப் பொருத்தது என உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த 2014-இல் நீதியரசர் ராமசுப்பிரமணியன், உயர்நீதிமன்றம் வெளியிட்ட அந்த சுற்றறிக்கை செல்லாது; விசாரணை நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில்தான் எழுதப்பட வேண்டும் என்ற மிக அற்புதமான தீர்ப்பை வழங்கினார்.
ஆனால், இந்தத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அந்தத் தடை உத்தரவு இதுவரை அகற்றப்படாததால்தான் விசாரணை நீதிமன்றங்களில் தமிழை முழுமையாகப் பின்பற்ற முடியாத சூழல் நிலவுகிறது.
தமிழ் அலுவல் மொழி: அரசமைப்புச் சட்டம் பிரிவு 348-இல் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசு மனது வைத்தால் உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க முடியும்.
இந்தியாவில் 5 மாநிலங்களில் ஆங்கிலத்துடன் ஹிந்தியும் அலுவல் மொழியாக உள்ளது. இதேபோன்று, சென்னை உயர்நீதிமன்றத்திலும் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும். அதற்கான முயற்சிகளைத் தொடர பாரதியார் பிறந்த நாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றார் ஜி.ஆர். சுவாமிநாதன்.
விழாவுக்கு, மதுரைக் கல்லூரி வாரியத் தலைவர் சங்கர சீத்தாராமன் தலைமை வகித்துப் பேசினார். தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் வரவேற்புரை ஆற்றினார். கவிஞர் ஜெயபாஸ்கரன் விருதாளர் அறிமுகவுரையாற்றினார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான டி.எஸ்.ஆர். வேங்கடரமணா வாழ்த்துரையாற்றினார். விருதாளர் தியாகி லட்சுமிகாந்தன் பாரதி ஏற்புரையாற்றினார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும விளம்பரப் பிரிவு முதுநிலை துணைத் தலைவர் ஜெ. விக்னேஷ்குமார் நினைவுப் பரிசு வழங்கினார். சேதுபதி மேல்நிலைப் பள்ளிச் செயலர் எஸ். பார்த்தசாரதி நன்றி கூறினார். மதுரைக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் கே. முத்துவேல் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
மதுரை மாநகர போக்குவரத்துப் பிரிவு காவல் துணை ஆணையர் எஸ். வனிதா, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம. திருமலை, பேராசிரியர் ம.பெ. சீனிவாசன், புலவர் கி. வேலாயுதம், விஞ்ஞானி நெல்லை சு. முத்து, மணியம்மை பள்ளித் தாளாளர் பி. வரதராஜன், கவிஞர்கள் ரவி, மு. அர்ச்சுனன், நேதாஜி இயக்கத் தலைவர் சுவாமிநாதன், காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலர் கே.ஆர். நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன், அல்அமீன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஷேக் நபி, சமூக சேவகர் மகபூப் ஜான், கம்பம் தமிழ் இலக்கியப் பேரவையினர், ராஜபாளையம், தென்காசி, கம்பம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாரதி அன்பர்கள், தமிழார்வலர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
சுதந்திரம் பேணிக் காக்கப்பட வேண்டும்: தியாகி லட்சுமிகாந்தன் பாரதி
பல்வேறு இன்னல்களுக்கு இடையே பெற்ற சுதந்திரம் பேணிக் காக்கப்பட வேண்டும் என தியாகி லட்சுமி காந்தன் பாரதி தெரிவித்தார்.
தினமணி சார்பில் வழங்கப்பட்ட மகாகவி பாரதியார் விருதைப் பெற்றுக் கொண்டு, தியாகி லட்சுமிகாந்தன் பாரதி நிகழ்த்திய ஏற்புரை:
மதுரையில் நான் கல்லூரியில் பயின்றபோது விடுதலைப் போரில் பங்கேற்றேன். இதற்காக கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டேன். அதன்பிறகு, எந்தக் கல்லூரியும் எனக்கு கல்வி பயில வாய்ப்பளிக்கவில்லை. மதுரைக் கல்லூரிதான் எனக்கு வாய்ப்பளித்தது.
மதுரை மாவட்ட ஆட்சியராக மட்டுமன்றி, பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளேன். தற்போதும் சமூக சேவையாற்றி வருகிறேன். தினமணி நாளிதழ் சார்பில் எனக்கு வழங்கப்பட்ட விருதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக தினமணி நாளிதழுக்கும், அதன் ஆசிரியருக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏனெனில், சுதந்திரப் போராட்ட காலத்தில் விடுதலை உணர்வை மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமை தினமணி நாளிதழுக்கு உண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த நாளிதழ் சார்பில் எனக்கு விருது வழங்கியிருப்பதில் உள்ளபடியே மகிழ்ச்சி.
மகாகவி பாரதியார் நமது தேசம் விடுதலை பெறுவதற்கு முன்பே, சுதந்திரம் பெற்றதாக "ஆடுவோமே, பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று' பாடினார். பாரதியார் ஞானி. வள்ளுவர் திருக்குறளில் "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை' என்கிறார். அதுபோன்றதொரு சிந்தனை பாரதி உள்ளத்திலும் எழுந்துள்ளது. அவரது காலத்தில் சுதந்திரம் குறித்த தாகம் நெருப்பாக எரிந்துள்ளது. அதனால்தான் தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம், கருகத் திருவுளமோ என்று பாடினார்.
மகாகவி பாரதியார், மகாத்மா காந்தி உள்ளிட்ட எண்ணற்ற சான்றோர்களின் தியாகங்களால் நாம் இன்று சுதந்திரக் காற்றை சுவாசித்து வருகிறோம். தற்போதைய நிலையில், பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது. எனவே, பாரதியின் வழியில் பல்வேறு இன்னல்களுக்கிடையே பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றார் அவர்.