``குர்தா முழுக்க ரத்தம்; யாரென்று தெரியவில்லை.." - சைஃப் அலிகானை ஆட்டோவில் ஏற்றிச்சென்ற டிரைவர்
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல்..
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் (Saif Ali Khan) இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பையில் உள்ள அவரது வீட்டில் அதிகாலையில் மர்ம நபரால் தாக்கப்பட்டார். உடம்பின் பல இடங்களில் பிளேடால் குத்தப்பட்டு காயம் ஏற்பட்டது. அவர் தற்போது மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டவுடன், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கார் எடுக்க முடியாத நிலை இருந்தது. எனவே, தாமதம் செய்யவேண்டாம் என்று கருதி ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
அவரை தனது ஆட்டோவில் அழைத்துச் சென்றது குறித்து டிரைவர் பஜன் சிங் ராணா தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து பஜன் சிங் ராணா கூறுகையில், ''நான் சைஃப் அலிகான் வீடு இருந்த தெரு வழியாக சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண் 'ஆட்டோ' என்று கத்தி, 'நிறுத்து, நிறுத்து' என்று சொன்னார்.
`குர்தா முழுக்க ரத்தத்துடன் ஆட்டோவில் ஏறினார்'
நான் சைஃப் அலிகான் கான் வீடு இருக்கும் கட்டிடம் அருகே ஆட்டோவை கொண்டு சென்றேன். ஒருவர் குர்தா முழுக்க ரத்தமாக இருந்தது. நடந்து வந்து ஆட்டோவில் ஏறினார். அதனால் எனக்கு எதாவது பிரச்னை வந்துவிடுமோ என்று கூட பயந்தேன். அவர் யாரென்று கூட நான் கவனிக்கவில்லை. அவரது கழுத்து மற்றும் பின்புறத்தில் காயம் இருந்தது. கையில் இருந்த காயத்தை பார்க்கவில்லை. அவருடன் ஒரு சிறுவன் மற்றும் ஒரு வாலிபரும் ஆட்டோவில் ஏறினர். மருத்துவ அவசரம் என்பதால் எந்த மருத்துவமனைக்குச் செல்லவேண்டும் என்று கேட்டேன். லீலாவதி மருத்துவமனைக்கு செல்லும்படி காயத்துடன் இருந்தவர் கூறினார்.
ரத்தக்காயத்துடன் இருந்தவர் வீட்டில் இருந்து நடந்து வந்துதான் ஆட்டோவில் ஏறினார். ஆட்டோவில் கூட அவர் தனது மகனிடம் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டுதான் வந்தார். மருத்துவமனை கேட்டிற்கு சென்ற பிறகுதான் அங்குள்ள கார்டை கூப்பிட்டார்.
ஸ்டெச்சரை எடுத்து வரும்படியும், தான் சைஃப் அலிகான் என்றும் தெரிவித்தார். அதன் பிறகுதான் அவர் சைஃப் அலிகான் என்று தெரிந்து கொண்டேன். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதற்கு பணம் கூட வாங்கவில்லை. அதனை நான் பெரிதாகவும் எடுத்துக்கொள்ளவில்லை'' என்று தெரிவித்தார்.
`முதுகெழும்பு பகுதியில் ஆபரேஷன்'
மருத்துவமனையில் சைஃப் அலிகான் இப்போது குணமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து டாக்டர் நிதின் டாங்கே கூறுகையில், ''சைஃப் அலிகான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார். அவரால் நடக்க முடிகிறது. ஆனால் முதுகெழும்பு பகுதியில் ஆபரேஷன் செய்யப்பட்டு இருப்பதால் முழுமையாக ஓய்வு எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளோம். அவரது உடம்பில் இருந்து 2.5 இஞ்ச் பிளேடு துண்டு அகற்றப்பட்டு இருக்கிறது. பிளேட் முதுகு தண்டு வடம் அருகில் இருந்தது. இன்னும் சிறிது ஆழமாக சென்று இருந்தால் பெரிய பிரச்னையாகி இருக்கும். அவரை அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றி இருக்கிறோம்'' என்றார்.
தாக்கிய நபர் யார்?
சைஃப் அலிகானை பிளேடால் தாக்கிய நபர் பற்றி இன்னும் எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. நேற்று ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்துச்சென்று விசாரித்தனர். ஆனால் அவர் குற்றவாளி இல்லை என்று தெரிய வந்துள்ளது.
குற்றவாளி குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் குற்றவாளி பிடிபடுவார் என்றும் 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், இத்தாக்குதலில் எந்தவித கேங்கிற்கும் தொடர்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். குற்றவாளியை கண்டுபிடிப்பதில் போலீஸார் திணறி வருகின்றனர். சைஃப் அலிகானை குத்திவிட்டு குற்றவாளி தப்பிச்சென்ற வழித்தடத்தில் கேமரா இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அவன் எங்கு சென்றான் என்பது மர்மமாக இருக்கிறது. பழைய கிரிமினல்களை ஒப்பிட்டுப்பார்த்தும் அதிலும் ஒத்துப்போகவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.