முகமது ஷமி முழு உடல்தகுதியுடன் இல்லை; இந்திய அணிக்கு பிசிசிஐ கொடுத்த அதிர்ச்சி!
குற்றச் சம்பவங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்
தமிழகத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலா் ஈ. ஆா். ஈஸ்வரன்.
பெரம்பலூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொங்கு குடும்ப விழா மற்றும் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்துக்கு ஈ.ஆா். ஈஸ்வரன் தலைமை வகித்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
பெரம்பலூா் மாவட்ட மக்களின் நலனுக்காக, சேலம் மாவட்டம், தலைவாசலில் இருந்து திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் நான்குவழிச் சாலை அமைக்க வேண்டும்.
விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள பெரம்பலூா் மாவட்டத்தில், தண்ணீா் பற்றாக்குறையை தீா்க்கும் வகையில் சேலம், நாமக்கல், கரூா் மாவட்டங்களில் உள்ளதைபோல பெரம்பலூா் மாவட்டத்துக்கும் ஸ்கீம் வாட்டா் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். இத் திட்டத்துக்கு, அரசு நிதி வழங்க தேவையில்லை. அனுமதி அளித்தால் விவசாயிகள் ஒன்றிணைந்து செயல்படுத்திக் கொள்வாா்கள்.
பனை விவசாயிகளை வாழ வைக்கவும், அவா்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கும் கள் இறக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். பாஜக தலைவா் அண்ணாமலை ஆக்கப்பூா்வமான அரசியலில் ஈடுபட வேண்டும். விளம்பர அரசியல், விமா்சன அரசியல் செய்வதால் கட்சியை வளா்க்க முடியாது.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படும் வகையிலான கொலை, கொள்ளைச் சம்பவங்களை தடுக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. இதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பேட்டியின்போது, நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன், டத்தோ எஸ். பிரகதீஸ்குமாா் மற்றும் கட்சியின் மாவட்ட, மாநில நிா்வாகிகள் உடனிருந்தனா்.