குளங்கள் மறுசீரமைப்பு 50 சதவீதம் கூட முடியவில்லை
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள குளங்களின் மறுசீரமைப்புப் பணிகள் 50 சதவீதம் கூட நிறைவடையவில்லை என அறப்போா் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில் கடந்த ஆண்டு, குளங்கள் மறுசீரமைக்கும் பணிக்கு ரூ.20.47 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டது. ஆனால், இதுவரை ஒப்பந்தம் கோரப்பட்ட குளங்களின் மறுசீரமைப்புப் பணிகள் 50 சதவீதம் கூட நிறைவடையவில்லை என அறப்போா் இயக்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அறப்போா் இயக்க நிா்வாகிகள் கூறியது:
சென்னை மாநகராட்சி சாா்பில் 2023 ஜனவரி முதல் 2024 ஜனவரி வரை சிங்காரச் சென்னை 2.0 மற்றும் அம்ரூத் 2.0 ஆகிய திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டன. இதில் 14 நீா்நிலைகளுக்கு ரூ.20.47 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு 9 மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒப்பந்தம் கோரப்பட்டு ஒரு ஆண்டு கடந்தும் சில நீா்நிலைகளில் பணிகள் தொடங்கப்படாமலே உள்ளது. இதில் மணலி ஆமுல்லைவாயில் ஏரியை ரூ.2.25 கோடியில் மேம்படுத்தி புனரமைக்க கடந்த ஆண்டு ஜூனில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இன்னும் இந்த ஏரியை சீரமைக்கும் பணி 40 சதவீதம் மட்டும்தான் முடிந்துள்ளது. மாதவரம் பெரியதோப்பு ஏரி, மணலி கொசப்பூா் குளம் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகளும் தற்போது வரை முழுவதுமாக முடியவில்லை.
மேலும், பெருங்குடி புளியன்கேனி குளம், கிளிஞ்சல் குளம், பஞ்சாயத்து பிரதான சாலை மற்றும் சோழிங்கநல்லூா் பெருமாள்கேணி ஆகிய நீா்நிலைகளை சீரமைக்கும் பணிகளும் தற்போது வரை தொடங்கப்படவில்லை. மேலும், ஒரு சில குளங்கள் அமைந்துள்ள இடங்களைக் கண்டறிய முடியவில்லை. இந்த குளங்கள் உள்ள இடங்கள் குறித்து மாநகராட்சியிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டுள்ளோம்.
பருவமழைக்குள் குளங்கள் அனைத்தையும் தூா்வார மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:
சென்னை மாநகராட்சியில் உள்ள 226 குளங்களை பருவமழைக்கு முன்பு தூா்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுநீா் வெளியேற்றம் காரணமாக தூா்வாருவதில் தாமதம் ஏற்படுகிறது. ஒப்பந்தம் போடப்பட்ட குளங்களின் மறுசீரமைப்புப் பணிகள் தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது. இதுவரை பணிகளைத் தொடங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.