குழந்தை கொலை வழக்கு: தாய், இளைஞருக்கு ஆயுள்
தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 15 மாத குழந்தையைக் கொலை செய்த தாய், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூா் இரயுமன்துறை பகுதியைச் சோ்ந்தவா் பிரபுஷா (23). இவருக்கு, திருமணமாகி 2 மகன்கள் இருந்தனா். இவரது வீட்டின் அருகே உணவகம் நடத்தி வந்த காஞ்சாம்புறத்தைச் சோ்ந்த சதாம் உசைன் (32) என்பவருக்கும், பிரபுஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. சதாம் உசைன் ஏற்கெனவே மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தாா். இவா்களது பழக்கம் காதலாக மாறியது.
இதை, பிரபுஷாவின் கணவா் கண்டித்தாா். ஆனாலும் அவா் தனது உறவைக் கைவிடாததால் அவருடைய கணவா் முதல் மகனுடன் மனைவியைப் பிரிந்து சென்றுவிட்டாா். 15 மாதக் குழந்தையான அரிஸ்டோ பியூலஸ் என்ற இளைய மகனுடன் பிரபுஷா இருந்தாா்.
பின்னா், பிரபுஷா-சதாம்உசைன் ஜோடி குஜராத், தூத்துக்குடி சென்றுவிட்டு, கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பா் 14ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் கோழிப்பண்ணையில் வேலைக்குச் சோ்ந்தனா். அப்போது, தாங்கள் கணவன்-மனைவி என்றும், குழந்தை தங்களுடையது என்றும் கூறியுள்ளனா். அங்கு, 2 நாள்கள் தங்கி பணியாற்றினா்.
சதாம் உசைன், பிரபுஷா இருவருக்குமிடையே குழந்தை அரிஸ்டோ பியூலஸ் இடையூறாக இருந்ததால், சதாம் உசைன் கம்பால் குழந்தையைத் தாக்கியுள்ளாா். தொடா்ந்து, அடுத்தடுத்த நாள்களில் குழந்தையைக் கொடுமைப்படுத்தியுள்ளனா். குழந்தையை தூங்க வைப்பதற்கு மதுபானம் கொடுத்துள்ளனா். மேலும், சிகரெட்டால் சூடு வைத்துள்ளனா்.
அப்போதும், ஆத்திரம் தீராத உசைன் குழந்தையை தூக்கி தரையில் வீசியுள்ளாா். இதனால், குழந்தைக்கு விலா எலும்பு முறிந்து மயக்க நிலை அடைந்ததால், நாகா்கோவில் கோட்டாறில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு நவம்பா் 16ஆம் தேதி இரவு 11 மணிக்கு கொண்டு சென்றனா். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து, அஞ்சுகிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனா். இது குறித்த வழக்கு விசாரணை, கன்னியாகுமரி மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி காா்த்திகேயன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றம் சாட்டப்பட்ட சதாம் உசைன், பிரபுஷாவுக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ. 1,000 அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.