Coolie: "நாம் ஒன்றாகப் பயணித்த நீண்ட பயணம் இது" - எடிட்டர் பிலோமின் ராஜ் குறித்த...
குழந்தை பராமரிப்பு மையத்தின் சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி! குழந்தை உடல் முழுவதும் காயம்!
நொய்டா: குழந்தை பராமரிப்பு மையத்தில் விடப்பட்ட குழந்தையை அதன் பராமரிப்பாளர் அடித்தும், தொடையில் கடித்தும், வலியால் குழந்தை கதறி அழும் விடியோ காட்டி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நொய்டாவில், வேலைக்குச் செல்லும் பெண், தன்னுடைய 15 மாதக் குழந்தையை பராமரிப்பு மையத்தில் விட்டுச் சென்றிருந்த நிலையில், பராமரிப்பாளரால் குழந்தை துன்புறுத்தும் காட்சிகள் வெளியாகியிருக்கிறது.
பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அனைத்து கொடூரங்களையும் பார்த்துக் கொண்டு சும்மா இருந்ததாக குழந்தைகள் பராமரிப்பு மைய உரிமையாளர் மீதும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் வேலை செய்து வந்த சோனாலி மற்றும் உரிமையாளர் சாரு ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் முதல், தினமும் இரண்டு மணி நேரம் அந்தக் குழந்தை, பராமரிப்பு மையத்தில் விடப்பட்டு வந்துள்ளது.
அவ்வாறு, கடந்த வாரம், குழந்தை மிகவும் சோர்ந்து காணப்பட்ட நிலையில், வீட்டுக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது, தொடையில் பற்கள் தடம் இருந்துள்ளது. இதையடுத்து மருத்துவரிடம் சென்று காண்பித்தபோது, இது பெரியவர்களின் பல் தடம் என்பதை உறுதி செய்தார்.
குழந்தையின் தாய், பராமரிப்பு மையத்துக்குச் சென்று அங்கிருந்த சிசிடிவி பதிவுகளைப் பார்த்தபோதுதான், சோனாலி, குழந்தையை தொடர்ந்து அடிப்பது, தூக்கி தரையில் வீசுவது, பிளாஸ்டிக் மட்டையால் அடிப்பது, கடிப்பது போன்று துன்புறுத்தி வந்தது பதிவாகியிருந்தது.
இது குறித்து உரிமையாளரிடம் கேட்டபோது, அவரும் குழந்தையின் தாயை மிரட்டியிருக்கிறார். குழந்தை தொடர்ந்து அழுதபோதும் சாரு என்னவென்றுகூட கேட்காமல் இருந்திருப்பதாகவும் தாய் குற்றம்சாட்டியிருக்கிறார.
இது குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குழந்தைக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.