கூட்டுப் பாலியல் கொடுமை செய்யப்பட்ட 11-ம் வகுப்பு படிக்கும் சிறுமி; போக்சோவில் கைதான இளைஞர்கள்!
பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தன் தோழியை பார்க்கச் சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (20) சிறுமியிடம் நைஸாக பேசி ஆசைவார்த்தைகளை கூறி பழகியிருக்கிறார்.
இதையடுத்து, `உங்கிட்ட தனியா நிறைய பேசணும் வா' என்ற அரவிந்த், அருகே கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள சவுக்கு தோப்புக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, அரவிந்த் நண்பரான சரண் (20) இருந்துள்ளார்.
இதையடுத்து இருவரும் சிறுமியிடம் அத்துமீறி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சவுக்கு தோப்புக்கு அருகே உள்ள சாலை வழியாகச் சென்றவர்கள் சிறுமியின் சத்தம் கேட்டு தோப்புக்குள் சென்று பார்த்தபோது, சிறுமிக்கு நடந்த கொடுமையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதற்குள் அரவிந்தும், சரணும் அங்கிருந்து ஓடி விட்டனர்.
உடனே இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இது தொடர்பாக சிறுமி அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த அரவிந்த் மற்றும் சரண் இருவரையும் கைது செய்த இன்ஸ்பெக்டர் கண்ணிகா தலைமையிலான போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.