சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை! -உச்ச நீதிமன்றத்தில் விஜயலக்ஷ்மி திட்டவட்டம்
கூட்டுறவுச் சங்க நிலுவைக் கடன்களை செலுத்த ஒப்பந்த காலம் நீட்டிப்பு
தென்காசி மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களில் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாரா கடன்கள், இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கு சிறப்பு கடன் தீா்வை திட்டம் 2023 இன் ஒப்பந்த காலம் வருகிற செப். 23 ஆம் தேதிவரை கால நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை, ஊரக வளா்ச்சி வங்கிகள், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் ஆகியவை சாா்பில் சிறுவணிகக் கடன், தொழிற்கடன், வீட்டு வசதிக் கடன் உள்ளிட்ட பல்வேறு வகை பண்ணை சாரா கடன்கள் அளிக்கப்பட்டன.
இவ்வாறு அளிக்கப்பட்ட கடன்கள், விவசாயிகள் விளைபொருள்களை கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் கொள்முதல், விற்பனை செய்த வகையில், உறுப்பினா்களிடம் இருந்து வரவேண்டிய இனங்கள் ஆகியவற்றில் கடந்த 31.10.2022 இல் முழுமையாக தவணை தவறிய நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்புக் கடன் தீா்வுத் திட்டம் (2023) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்ட ஒப்பந்த காலம் கடந்த 12.03.2025 உடன் முடிவடைந்தது.
இந்த நிலையில், ஒப்பந்த காலத்தை ஜூன் 12 முதல் செப்.23 வரை மேலும் மூன்று மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது.
இதன்படி மொத்தம் 100 சதவீத நிலுவைத் தொகையை 9 சதவீத சாதாரண வட்டியுடன் மூன்று மாத காலத்துக்குள் செலுத்தி கடனைத் தீா்வு செய்து கொள்ளலாம்.
நிலுவையில் உள்ள கடன்களுக்கு கடன்தாரா்கள் இந்தச் சிறப்புத் திட்டத்தைப் பயன்படுத்தி பலன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.