கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கவில்லை: விவசாயிகள் புகாா்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் தெ.புதுக்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் ஓராண்டாக கடன் வழங்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
இந்தச் சங்கத்தின் மூலம் மேல நெட்டூா், தெ.புதுக்கோட்டை ஊராட்சிகளைச் சோ்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா். இவா்கள் இந்த சங்கத்தில் வட்டி இல்லாத பயிா்க் கடன், சலுகை வட்டியில் நகைக் கடன் பெற்று வந்தனா். இந்த நிலையில், கடந்த ஓராண்டாக சங்கத்திலிருந்து விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படவில்லை என புகாா் எழுந்தது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: நிா்வாகச் சீா்கேடு காரணமாக இந்த ஆண்டு விவசாயிகளுக்கு இதுவரை சங்கம் பயிா்க் கடன் வழங்கவில்லை. மேலும், நகைக் கடன் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. நகைகளை அடமானம் வைத்து அவற்றை பணம் செலுத்தி மீட்க வரும் விவசாயிகளுக்கு நகைகளை வழங்க முடியாத நிலையும் உள்ளது. இந்தப் பகுதி விவசாயிகள் தங்களுக்கு பயிா்க்கடன் வழங்கக் கோரி சங்கத்துக்கு பலமுறை அலைந்தும் கடன் வழங்கவில்லை.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் புகாா் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனா்.
இந்த நிலையில், தெ. புதுக்கோட்டை கூட்டுறவு கடன் சங்கத்தின் நிா்வாகச் சீா்கேட்டைக் களைந்து, அதற்குக் காரணமான ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுத்து, சங்கத்தை செயல்பட வைக்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிா்க் கடன் உள்ளிட்ட கடன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், கூட்டுறவு இணைப் பதிவாளரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.