கூலித் தொழிலாளி கொலை சம்பவம்: மற்றவா்களையும் கைது செய்யக் கோரி கிராம மக்கள் காத்...
கேபிடல் கலவரத்தில் கைதான 1,500 பேருக்கு டிரம்ப் பொதுமன்னிப்பு!
அமெரிக்க நாடாளுமன்றமான கேபிடலில் 2021 ஆம் ஆண்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 1,500 பேருக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்டு டிரம்ப் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டார். முந்தைய அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகளை ரத்து செய்தார்.
இதனிடையே, கடந்த 2021 ஆம் ஆண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்தை தாக்குதல் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 1,500 க்கும் மேற்பட்டோருக்கு பொதுமன்னிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 2021 கேபிடல் கலவரம் தொடர்புடைய நிலுவையில் உள்ள 450 வழக்குகளை ரத்து செய்ய அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம், தனக்கு ஆதரவாக 2021 ஆம் ஆண்டில் போராடி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற தேர்தல் வாக்குறுதியை முதல்நாளிலேயே டிரம்ப் நிறைவேற்றியுள்ளார்.
கேபிடல் கலவரம்
2020 அமெரிக்க அதிபர் தேர்தல் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். இதையடுத்து, ஜனவரி 6 ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றம், வெள்ளை மாளிகை உள்பட வாஷிங்டன் நகரின் பல்வேறு பகுதிகளில் கலவரம் செய்தனர்.
கலவரக்காரர்களில் சிலர் ஆயுதங்களுடன் பொது சொத்துகளை சேதப்படுத்தி, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களை கொடூரமாக தாக்கினர். இதில், 100 க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயமடைந்தனர்.
இந்த கலவர வழக்கில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இருவர் மட்டுமே குற்றத்தில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இதுவரை 1,020 பேர் குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஏற்கெனவே 1,000-க்கும் மேற்பட்டோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 700-க்கும் அதிகமானோருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்டது.
தற்போது கலவரம் நடைபெற்ற அதே கேபிடல் கட்டடத்தில்தான் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற டிரம்ப், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி கையெழுத்திட்டுள்ளார்.