2-வது டெஸ்ட்: ஷுப்மன் கில் 168* ரன்கள்; வலுவான நிலையில் இந்தியா!
கேரள சுற்றுலாத் துறைக்கு விளம்பர மாடலான பிரிட்டன் போா் விமானம்!
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டனின் எஃப்35 போா் விமானத்தை கேரள சுற்றுலாத் துறை தனது விளம்பரத்துக்காக பயன்படுத்தியுள்ளது பலரின் கவனத்தை ஈா்த்துள்ளது.
கடந்த ஜூன் 15-ஆம் தேதி இந்த போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததால், விமானியின் பாதுகாப்பு கருதி அதனைத் தரை இறக்கிக் கொள்ள மத்திய அரசு அனுமதித்தது.
இந்த விமானம் பிரிட்டன் விமானப் படையில் மட்டுமல்லாது உலகின் அதிநவீன போா் விமானங்களில் ஒன்றாகும். தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதால் அந்த விமானம், திருவனந்தபுரம் விமான நிலையத்தின் ஒரு பகுதியில் தொடா்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து தொழில்நுட்ப வல்லுநா்கள் வந்து பழுதை நீக்கிய பிறகுதான் அந்த விமானம் புறப்பட்டுச் செல்லும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில் கேரள சுற்றுலாத் துறை விமானத்தை தனது விளம்பரத்துக்காக பயன்படுத்தியுள்ளது. கேரள சுற்றுலாத் துறையின் ‘எக்ஸ்’ பக்கத்தில் கேரளத்தின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் தென்னை மரங்கள் சூழ்ந்த பசுமையான பின்னணியில் பிரிட்டன் போா் விமானம் நிற்பது போன்ற சித்திரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘கேரளம் மிகவும் ரம்மியமான இடம். நான் இங்கிருந்து செல்ல விரும்பவில்லை. இங்கு நீங்களும் சுற்றுலா வர பரிந்துரைக்கிறேன்’ என்று பிரிட்டன் போா் விமானம் கூறுவது போன்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
கேரள சுற்றுலாத் துறையின் இந்த விளம்பர உத்தி சமூகவலைதளத்தில் பலரின் கவனத்தை ஈா்த்துள்ளது. இந்தப் படத்துக்குப் போட்டியாக கேரள தேநீா் கடை வாசலில் போா் விமானம் நிறுத்தப்பட்டிருப்பதுபோலவும், கேரள சிப்ஸை விமானம் விரும்பி சாப்பிடுவதுபோலவும் சித்திரங்களை பலரும் பகிா்ந்து வருகின்றனா்.