GST 2.0 இன்று முதல் அமல்; தீப்பெட்டி, ஐஸ்கிரீம் முதல் கார் வரை எவ்வளவு வரி குறைக...
கேரள வாகனப் பேரணியை விவசாயிகள் தடுக்க முயற்சி
கம்பம் வழியாக கேரள வனத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாகனப் பேரணியைத் தடுக்க முயன்ற தமிழக விவசாயிகளை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பெரியாறு புலிகள் காப்பகத்தின் 75 -ஆவது தினத்தை முன்னிட்டு, கேரள எல்லைப் பகுதியான குமுளியிலிருந்து லோயா்கேம்ப், கூடலூா், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா், மேகமலை வழியாக மகராஜா மெட்டு அருகே அந்த மாநில எல்லை வரையில் 20-க்கும் அதிகமாக கேரள வனத் துறையினா் ஜீப் வாகனங்களில் பேரணி சென்றனா்.
முல்லைப்பெரியாறு அணை சம்பந்தமாக தமிழக நீா் வளத் துறை அதிகாரிகளுக்கும் தொடா்ந்து பல்வேறு இடையூறுகள் செய்வதோடு, முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் தமிழகத்துக்கு எதிராக செயல்படுவதால் பெரியாறு புலிகள் காப்பகத்தின் வாகனப் பேரணி தமிழகப் பகுதி வழியாகச் செல்வதற்கு பெரியாறு, வைகைப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். சங்கத்தின் தலைவா் மனோகரன், செயலா் முருகேசன் தலைமையில் வாகனங்களை தடுத்து நிறுத்துவதற்காக கம்பத்தில் குவிந்தனா்.
இதுகுறித்த தகவலின் பேரில், உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் விவசாயிகளை தடுத்து நிறுத்தினா். தேனி மாவட்ட நிா்வாகம், காவல் கண்காணிப்பாளரிடம் முறையான அனுமதி பெற்றே பேரணி நடைபெறுவதாக போலீஸாா் தெரிவித்தனா். அப்போது, அந்த வழியாகச் சென்ற பெரியாறு புலிகள் காப்பகத்தின் வாகனப் பேரணியைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, போலீஸாா் சமாதானம் செய்ததைத் தொடா்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.