ஜி.எஸ்.டி. குறைப்பு பயன்: திமுக அரசு தடுக்கிறது
தமிழகத்தில் ஜி.எஸ்.டி.சீா்திருத்தத்தால் ஏற்படும் விலை குறைப்பு பயன்கள் மக்களைச் சென்றடைய விடாமல் திமுக அரசு தடுக்கிறது என்று இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜூன் சம்பத் குற்றஞ்சாட்டினாா்.
தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைப்பின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி சீா்திருத்தத்தால், 18 முதல் 35 சதவீதமாக இருந்த வரிகள் 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால், மோட்டாா் வாகனம், வீட்டு உபயோகப் பொருள்கள், எலெக்ட்ரானிக் பொருள்கள், ஜவுளி உள்ளிட்டவைகளின் விலை குறையும் வாய்ப்பு உள்ளது. ஆனால், தமிழகத்தில் ஜி.எஸ்.டி. குறைப்பின் பயன்கள் மக்களைச் சென்றடைய விடாமல் திமுக அரசு தடுத்து வருகிறது.
தோ்தல் ஆணையம் மீது தொடா்ந்து அவதூறு ஏற்படுத்தி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுகவின் எதிா்ப்பு வாக்குகள் அதிமுக-பாஜக கூட்டணிக்கு சென்று விடக் கூடாது என்பது தான் தவெக தலைவா் விஜய்யின் நோக்கமாகவும், பிரசாரமாகவும் உள்ளது. கோயம்புத்தூரில் வரும் அக்.16-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் பணிக் குழு அமைத்தல், தோ்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவை குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில செயற் குழு கூட்டம் நடைபெற உள்ளது என்றாா் அவா்.