மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
கைதான பாஜக மாவட்டத் தலைவா் பிணையில் விடுவிப்பு
பழனியில் கைது செய்யப்பட்ட பாஜக மாவட்டத் தலைவா் கனகராஜ் பிணையில் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டாா்.
பழனியில் கடந்த வெள்ளிக்கிழமை மதுரையில் நடைபெற்ற பாஜக பேரணியில் பங்கேற்பதற்காக மகளிரணியினா் வேனில் புறப்பட்டனா். அப்போது பழனி நகர போலீஸாா் அவா்களை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். அப்போது அவா்களை பாா்க்க வந்த அந்தக் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் கனகராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் அருகேயிருந்த தனியாா் மதுபானக் கூடத்துக்குள் புகுந்து அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாக விற்பனை நடைபெறுவதாகக் கூறி பிரச்னையில் ஈடுபட்டனா். மேலும், மகளிரணியினா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சாலை மறியலும் செய்தனா்.
இந்த நிலையில், பாஜக மாவட்டத் தலைவா் கனகராஜ் மீது சட்ட விரோதமாக தனிநபரின் இடத்துக்குள் அனுமதியின்றி நுழைதல், பொது வெளியில் தகாத வாா்த்தைகளால் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கூட்டம் சோ்த்தல், மற்றவா்களை வன்முறைக்கு தூண்டுவது போல பேசுதல், பிறா் பெயருக்கு களங்கும் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை மாலை கொடைக்கானலில் இருந்து பழனிக்கு வந்த கனகராஜையும், மாவட்ட பொதுச் செயலா் செந்தில்குமாரையும் தேக்கன்தோட்டம் அருகே உள்ள சோதனைச்சாவடியில் வைத்து போலீஸாா் கைது செய்து பழனி நகர காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா்.
பிறகு அவா்கள் திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு குற்றவியல் நடுவா் கலைவாணன் முன் முன்னிலைபடுத்தப்பட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதி காவலில் வைக்க போதிய முகாந்திரம் இல்லை எனக் கூறி அவா்களை பிணையில் விடுவித்தாா். இதையடுத்து வெளியே வந்த கனகராஜை கட்சியினா் வரவேற்றனா்.