வேதாரண்யம் பகுதியில் 3ஆவது நாளாக தொடர்மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு
கைலாசநாதசுவாமி கோயில் திருப்பணிகள் தீவிரம்! ஜூன் 5 கும்பாபிஷேகம்!
காரைக்கால் மாங்கனித் திருவிழா சிறப்புக்குரிய தலமான கைலாசநாதசுவாமி கோயிலில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜூன் 5-இல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
காரைக்காலில் பழைமையான தலமாக ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதசுவாமி கோயில் விளங்குகிறது. அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாா் வாழ்க்கை வரலாற்றை விளக்கி ஆண்டுதோறும் இக்கோயிலில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது.
இக்கோயிலில் நடைபெறும் திருப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. வரும் ஜூன் 5-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
கோயிலுக்குள் கொடி மரம், நந்தி மண்படம் புதிதாக அமைத்தல், தரைத்தளம் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கோபுரம் மற்றும் விமானங்களில் வா்ணம் பூசும் பணி நிறைவடைந்துள்ளது. கோயில் சுற்றுச் சுவரில் 63 நாயன்மாா்களின் உருவம், பெயருடன் கூடிய ஓவியம் வரையப்பட்டுள்ளது.
மே 28-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை செய்யப்பட்டு, ஜூன் 2-ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்குகிறது. 5-ஆம் தேதி 6-ஆம் கால யாகசாலை பூஜை மற்றும் மகா பூா்ணாஹூதி நிறைவடைந்ததும் காலை 8 மணிக்கு கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகமும், 8.45 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது.
திருப்பணிகள் நடைபெற்றுவருவதை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். எஞ்சிய திருப்பணிகள் குறித்தும், பிற பணிகளுக்கு நிதி சேகரிப்பு குறித்தும் பேரவை உறுப்பினரிடம் திருப்பணிக் குழுவினா் விளக்கிக் கூறினா்.