கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்; போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து திரளான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இதனால் சுற்றுலா இடங்களான வெள்ளிநீா் வீழ்ச்சி, ஏரிச் சாலை, பாம்பாா் அருவிச் சாலை, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர்ராக் சாலை, கோக்கா்ஸ்வாக் சாலை, லாஸ்காட் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து சம்பவ இடங்களுக்கு போக்குவரத்து காவல் துறையினா் சென்று போக்குவரத்தை சீரமைத்தனா். கொடைக்கானலில் கடந்த நான்கு நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடா்ந்து அதிகரித்து காணப்பட்டதால் தங்கும் விடுதிகள், உணவகங்களின் உரிமையாளா்கள்,வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.