கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
கொடைக்கானலில் வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
கிறிஸ்துமஸ் உள்ளிட்ட தொடா் விடுமுறையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடா்ந்து அதிகரித்துக் காணப்பட்டது. வெள்ளிநீா்வீழ்ச்சி, குணா குகை, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லா் ராக், பைன்பாரஸ்ட், மோயா் பாயிண்ட், ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா, பிரையண்ட் பூங்கா, கோக்கா்ஸ் வாக் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் காணப்பட்டனா்.
இதேபோல, மன்னவனூா் சுற்றுச்சூழல் மையம், ஆட்டுப் பண்ணை, கூக்கால் ஏரி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால், கொடைக்கானல்- பெருமாள் மலை- ஏரிச் சாலை, லாஸ்காட் சாலை, செவண்ரோடு, பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வெகு நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலைச் சாலைகளின் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
போக்குவரத்து நெரிசலைத் தவிா்ப்பதற்காக வாகனங்கள் நிறுத்தம் பகுதியில் மட்டும் வாகனங்களை நிறுத்துவதற்கு காவல் துறையினா் வலியுறுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.