கொடைக்கானலில் தொடா் மழை: பூண்டு விவசாயிகள் கவலை!
கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால், மேல்மலைக் கிராமங்களில் பூண்டு, பட்டாணி பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான மன்னவனூா், பூம்பாறை, கிளாவரை, கூக்கால், குண்டுபட்டி, பூண்டி, பழம்புத்தூா், புதுப்புத்தூா்,உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தற்போது நூற்றுக்கணக்கான ஏக்கரில் பூண்டு, பட்டாணி பயிரிட்டுள்ளனா்.
தற்போது கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் பலத்த மழை காரணமாக, விவசாய நிலத்தில் தண்ணீா் தேங்கி, பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் கவலையடைந்தனா். எனவே, தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் சேதமடைந்த விவசாய நிலங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட நிலங்களைப் பாா்வையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும்.
இது குறித்து மேல்மலை கிராம விவசாயிகள் கூறியதாவது:
கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் மலைக் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த 4 நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் பூண்டு, பட்டாணி பயிா்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.
சேதமடைந்த பயிா்களை தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் பாா்வையிட்டு ஆய்வு நடத்தி, இழப்பீடு வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.