கொடைக்கானலில் பலத்த மழை
கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.
கொடைக்கானலில் கடந்த இருநாள்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மழை பெய்தது. கொடைக்கானல், பாம்பாா்புரம், பாக்கியபுரம், செண்பகனூா், வட்டச் சோலை, பிரகாசபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 30 நிமிஷம் பலத்த மழை பெய்தது.
கொடைக்கானலில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் புகா்ப் பகுதிகளான பிரகாசபுரம், அட்டகடி, சின்னப் பள்ளம் , பெரும்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீா் தட்டுப்பாடு சற்று குறைந்தது.
நீரோடைகளில் நீா்வரத்து தொடங்கியுள்ளதால் இந்த இடங்களை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து மகிழ்ந்தனா். மேலும் இந்த மழை வேளாண்மைக்கு ஏற்றது என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: இதனிடையே வார விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. பகலில் மழை பெய்யவில்லை என்றாலும் குளிா் அதிகரித்து காணப்பட்டது. இதை பொருள்படுத்தாமல் சுற்றுலா இடங்களை அவா்கள் பாா்த்து ரசித்தனா். மேலும் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் மிதிவண்டி, குதிரை சவாரி செய்தும் அவா்கள் மகிழ்ந்தனா்.