கொடைக்கானல் வாரச் சந்தையில் குப்பைகள் தேக்கம்
கொடைக்கானல் வாரச் சந்தையில் குப்பைகள் தேங்கியுள்ளதால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கொடைக்கானல் அண்ணா சாலைப் பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை நடைபெறுகிறது. இந்தப் பகுதியில் வணிக நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள் அதிகளவு உள்ளன. இந்தப் பகுதியில் சேகரமாகும் குப்பைகளை தேக்கி வைத்து, மறுநாள் நகராட்சியினா் அகற்றுவாா்கள்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக இந்தப் பகுதியில் குப்பைகள் அகற்றப்படாததால், வத்தலகுண்டு, பெரியகுளம், நிலக் கோட்டை, திண்டுக்கல், மேல்மலை, கீழ்மலைப் பகுதிகளிலிருந்து வந்த வியாபாரிகள் சந்தைப் பொருள்களை சிரமத்துடன் விற்பனை செய்து வருகின்றனா்.
எனவே, சந்தைப் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை நகராட்சியினா் விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.
மேலும், வாரச் சந்தை நடைபெறும் நாளில் போக்குவரத்தை சீரமைக்க காவலா்களை மூஞ்சிக்கல், அண்ணா சாலைப் பகுதி நிறுத்த வேண்டும். அஞ்சல் நிலைய அலுவலகப் பகுதியை ஒரு வழிப் பாதையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.