கொட்டாம்பட்டி போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிா்ப்பு மக்கள் கூட்டமைப்பு நிா்வாகி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த கொட்டாம்பட்டி காவல் நிலைய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிா்ப்பு மக்கள் கூட்டமைப்பின் நிா்வாகி கம்பூா் செல்வராஜ் மீது கொட்டாம்பட்டி காவல் நிலைய போலீஸாா் அண்மையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இது, மக்கள் நலப் போராட்டத்தில் ஈடுபடுவோரை அச்சுறுத்தும் வகையில் காவல் துறையினா் பதிவு செய்த பொய் வழக்கு என பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில், மேலூா் வட்டம், தும்பைப்பட்டி பகுதியில் வசித்து வரும் கம்பூா் செல்வராஜின் சகோதரி எம். திலகத்தின் வீட்டில் கொட்டாம்பட்டி போலீஸாா் அண்மையில் திடீரென சோதனையிட்டனா். இதைக் கண்டித்து, எம். திலகம், டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிா்ப்பு மக்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில், டங்ஸ்டன் சுரங்க எதிா்ப்புத் திட்ட நிா்வாகி கம்பூா் செல்வராஜ் மீது எந்தவித விசாரணையும் இல்லாமல் கொட்டாம்பட்டி போலீஸாா் பதிவு செய்த வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும். அவரது சகோதரி வீட்டில் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தல் விடுத்த போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.