கொலை முயற்சி, கொள்ளை வழக்குகளில் 21 ஆண்டுகளாகத் தேடப்பட்ட குற்றவாளி கைது!
மகாராஷ்டிரத்தில் கொலை முயற்சி, கொள்ளை போன்ற வழக்குகளில் 21 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள விகார் நகரில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று 4 பேர் கொண்ட கும்பல் ஒரு பங்களாவில் திருடச் சென்றனர்.
அந்த வீட்டில் வசித்தவர்களைக் கத்தி முனையில் கட்டிப்போட்டு துணிகளைக் கொண்டு முகத்தை மூடிய கும்பல், அந்த வீட்டிலிருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தைத் திருடிச் சென்றனர். அதேபோல, பக்கத்து வீட்டிலும் திருடச் சென்றபோது அங்கு எதுவும் கிடைக்காமல் தப்பியோடினர். இந்தக் குற்றவாளிகள் பர்தி என்னும் கிரிமினல் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | பிடிவாதத்தைக் கைவிட்டு விவசாயிகளிடம் பேசுங்கள்: மத்திய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் கோரிக்கை!
இதுதொடர்பாக விரார் நகரக் காவல்துறையினர் அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது கொலை முயற்சி மற்றும் கொள்ளை குற்றங்களில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த வழக்கில் ஒரு குற்றவாளியான ராஜேஷ் சத்யவான் பவார் என்பவர் 2005 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், 3 குற்றவாளிகள் தொடர்ந்து தேடப்பட்டு வந்தனர்.
கடந்த சில மாதங்களாக குற்றப்பிரிவு காவல்துறையினரால் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இதில், முக்கியக் குற்றவாளியான பாபுராவ் அன்னா காலே தனது சொந்த கிராமமான ஜால்னாவில் அடையாளத்தை மறைத்து வசிப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அங்கு விரைந்து 21 ஆண்டுகளுக்குப் பின் அவரைக் கைது செய்தனர்.
இதையும் படிக்க | அம்பேத்கர் விவகாரம்: அடித்துக் கொண்ட காங்கிரஸ் - பாஜக கவுன்சிலர்கள்!!
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு காவல் நிலையங்களில் பதியப்பட்ட கொலை முயற்சி, திருட்டு போன்ற மேலும் 10 வழக்குகளில் காலேவுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருக்கிறதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
2003 கொள்ளை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.