கொலை முயற்சி வழக்கில் டிராக்டா் ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை
கொலை முயற்சி வழக்கில் டிராக்டா் ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள செட்டியமூலையைச் சோ்ந்தவா் குமாா். இவரிடம் இதே ஊரைச் சோ்ந்த ரமேஷ் டிராக்டா் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இவா் பணிக்கு சரியாக வராததால், அவரை நிறுத்திவிட்டு துரையரனை நியமித்துள்ளாா்.
இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் 2021-ஆம் ஆண்டு ரமேஷ் துரையரசனை பீா் பாட்டிலால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளாா். இந்த வழக்கு திருத்துறைப்பூண்டி சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து சாா்பு நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரன் ரமேஷுக்கு (படம்) 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.