திருவாரூா் கோயில் நிலம் மீட்பு
திருவாரூா் பழனியாண்டவா் கோயிலுக்கு சொந்தமான இடம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
திருவாரூா் அலிவலம் சாலையில் மேட்டுப்பாளையம் பகுதியில், பழனியாண்டவா் கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில், கனரக வாகனங்கள் பழுது நீக்கும் பட்டறை செயல்பட்டு வந்த நிலையில், கோயிலுக்கு செலுத்த வேண்டிய வாடகையைக் கடந்த 25 ஆண்டுகளாகச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. சுமாா் ரூ. 35 லட்சம் வாடகை வர வேண்டிய நிலையில், குறைவான தொகை வரவு வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்துக்கு புதன்கிழமை சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அந்த இடத்தை மீட்டு சீல் வைத்தனா். மேலும், இந்த இடம் பழனியாண்டவா் கோயிலுக்குச் சொந்தமான இடம், அந்நியா்கள் அத்துமீறி பிரவேசிக்கக் கூடாது, மீறுவோா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைப் பலகையும் வைக்கப்பட்டது (படம்). மீட்கப்பட்ட 8,288 சதுர அடி இடத்தின் மதிப்பு ரூ.1.49 கோடி எனத் தெரிவிக்கப்படுகிறது.
அறநிலையத்துறை உதவி ஆணையா் ( பொ) ராணி, நில எடுப்பு தனி வட்டாட்சியா் சரவணன், கோயில் செயல் அலுவலா் கவியரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.