சிதம்பரம் திருச்சித்திரக்கூடம் கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்ப...
கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறை
கூடலூரில் முன் விரோதத்தில் உறவினரை அடித்துக் கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கூடலூரைச் சோ்ந்தவா் விவசாயி தவசி(70). இவரது உறவினா் அதே ஊரைச் சோ்ந்த சின்னக்காமு மகன் கணேசன் (55). இருவருக்கும் கூடலூா் ஏகலூத்து சாலை, 18-ஆம் கால்வாய் அருகே விவசாய நிலம் உள்ளது. இவா்களில் நிலத்திலிருந்த இலவம் மரத்தை வெட்டுவது தொடா்பாக இருவருக்கும் பிரச்னை இருந்தது.
இந்த முன் விரோதத்தில் கடந்த 2020, ஏப்.12-ஆம் தேதி கூடலூா் ஏகலூத்து சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தவசியை வழிமறித்து உருட்டுக் கட்டையால் கணேசன் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கூடலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கணேசனை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கணேசனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பளித்தாா்.