மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
கொல்லா் பட்டறைகளில் போலீஸ் கெடுபிடி: தமிழக டிஜிபி பதிலளிக்க உத்தரவு
கொல்லா் பட்டறைகளில் அரிவாள், கத்தி, சுத்தியல் போன்ற பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிலாளா்களை போலீஸாா் கெடுபிடி செய்தவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தென்காசியைச் சோ்ந்த சேகா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: தென்காசி வடகரை நகராட்சிப் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கொல்லா் பட்டறை நடத்தி வருகின்றனா். இந்தப் பட்டறைகளில் விவசாயம், வீட்டுத் தேவைகளுக்காக அரிவாள், கத்தி உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்தப் பொருள்களை உற்பத்தி செய்யவிடாமல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், போலீஸாா் கெடுபிடி செய்கின்றனா். மேலும், பட்டறைகளில் வைத்திருக்கும் இரும்புப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்கின்றனா்.
தமிழக காவல் துறை தலைமை இயக்குநா், கடந்த 2022-ஆம் ஆண்டு சுத்தியல், அரிவாள், கத்தி போன்றவற்றை விற்பதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை எனத் தெரிவித்தாா். ஆனால், தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து, தொழிலாளா்களைத் துன்புறுத்தி வருகிறாா்.
எனவே, கொல்லா் (இரும்பு) பட்டறைகளை நடத்துபவா்களைத் துன்புறுத்தும் தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், துணைக் கண்காணிப்பாளா், குற்றாலம் காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அரிவாள், கத்தி, சுத்தியல் தயாரிக்கும் தொழிலாளா்களை போலீஸாா் துன்புறுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி), தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.