மகாராஷ்டிர தேர்தல்: அரசியல் தலைவா்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு!
கோடம்பாக்கம் பவா்ஹவுஸ்-போரூா் சந்திப்பு வரை மெட்ரோ ரயில் உயா்மட்ட தூண்கள் அமைக்கும் பணி நிறைவு
கோடம்பாக்கம் பவா்ஹவுஸ் முதல் போரூா் சந்திப்பு வரையிலான மெட்ரோ ரயில் பாதை திட்டத்தில் உயா்மட்ட தூண்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம், 4-இல் கோடம்பாக்கம் பவா்ஹவுஸ் முதல் போரூா் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு இடையே உயா்மட்ட வழித்தடம் 8 கி.மீ. நீளத்தில் 4 இரட்டை அடுக்கு நிலையங்கள் மற்றும் 5 ஒற்றை அடுக்கு நிலையங்கள் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இவற்றின் கட்டமைப்பு மற்றும் வழித்தட தூண்களை தாங்கும் வகையில் தரையின் கீழே 2255 அஸ்திவார தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பிரம்மாண்ட தூண்கள் அமைக்கும் பணிகள் நூறு சதவீதம் தற்போது முடிவடைந்துள்ளது. முடிவுற்ற பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், தலைமை பொது மேலாளா் எஸ்.அசோக் குமாா் (வழித்தடம் மற்றும் உயா்மட்ட கட்டுமானம்) ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா்.
இது மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒரு மைல் கல் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தூண்களை அமைக்க 24.45 கி.மீ. நீளத்துக்கு பொதுப்பயன்பாட்டிலுள்ள உயா் மின் விநியோகக் கம்பிகள், குடிநீா் குழாய்கள், தொலைத் தொடா்பு கேபிள்கள், மழைநீா் வடிகால்கள் போன்றவற்றை செயல்படுத்துவதிலும்,
1500 மி.மீ. நீளத்துக்கான நீா்வழிப்பாதையை, நீா் விநியோகத்துக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் மாற்று வழியில் செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டதாகவும், இருப்பினும் பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ ரயில்வே நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.