"விஜய்யின் கூட்டணிக்காக சட்டமன்றத்தில் அதிமுக குரல் கொடுக்கிறதா?" -அதிமுக ராஜேந்...
கோத்தகிரி: ஒருபக்கம் சுருக்கு கம்பி, மறுபக்கம் மின்கம்பி - துடிதுடித்து இறந்த 2 கரடிகள்
வனத்துக்கும் வன உயிரினங்களுக்கும் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நீலகிரியில் வன விலங்குகள் இயற்கைக்கு மாறாக உயிரிழக்கும் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. துப்பாக்கி வேட்டைக்கு அடுத்தபடியாக சுருக்கு கம்பிகள் மூலம் வனவிலங்குகளை வேட்டையாடும் போக்கும் கட்டுபடுத்த முடியாத நிலையில் இருக்கிறது.

இந்த நிலையில், கோத்தகிரி அருகில் உள்ள தீனட்டி செல்லும் சாலை அருகில் சோலார் மின் வேலியில் சிக்கி கரடி ஒன்று பரிதாபமாக இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு நேற்று காலை தகவல் கிடைத்திருக்கிறது. வனத்துறையினர் சென்று ஆய்வு மேற்கொள்கையில், சோலார் மின் வேலியில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த சுருக்கு வலை கம்பியில் சிக்கி அந்த கரடி துடிதுடித்து உயிரிழந்திருப்பதை உறுதி செய்துள்ளனர். அது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் கோத்தகிரி அருகில் உள்ள அரவேணு குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று இறந்து கிடப்பதாக நேற்று காலை கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. அந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் ஆண் கரடி ஒன்று பரிதாபமாக உயிரிழந்திருப்பதை உறுதி செய்துள்ளனர். இது குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து நீலகிரி வனத்துறையினர், " சீனிவாசா எஸ்டேட் மின் வேலியில் சுருக்கு கம்பி வைத்து கரடியை கொன்ற வழக்கில் வினோத் குமார் என்பவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். அதேபோல் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கரடியின் உடலை கூறாய்வு செய்து மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். சுருக்கு கம்பி வைக்கும் நபர்களுக்கு எதிராக தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம்" என்றனர்.