கோயில் அா்ச்சகா்களுக்கு தட்டுகாணிக்கை சுற்றறிக்கை வாபஸ்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
சென்னை: மதுரை பாலதண்டாயுதபாணி கோயிலில் அா்ச்சகா்கள் தட்டில் செலுத்தப்படும் காணிக்கை குறித்த சுற்றறிக்கை தேவையில்லாதது என்றும், அது திரும்பப் பெறப்பட்டுவிட்டது என்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை வில்லிவாக்கம் தேவி பாலியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை கலந்து கொண்டாா்.
இதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
வில்லிவாக்கம் தேவி பாலியம்மன் திருக்கோயிலுக்கு உபயதாரா் நிதி ரூ. 2.60 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) 7 திருக்கோயில்கள் திங்கள்கிழமை (பிப்.10) கோயம்புத்தூா் மாவட்டம், அவிநாசி தண்டுமாரியம்மன் திருக்கோயில், பேரூா் பட்டீஸ்வரா் திருக்கோயில், தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் திருக்கோயில், ஒரத்தநாடு உலகளந்த பெருமாள் திருக்கோயில், தேனி கௌமாரியம்மன் திருக்கோயில், கோயம்பேடு வைகுண்டவாச பெருமாள் திருக்கோயில் போன்ற ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்கள் உட்பட 69 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 2,580 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
மதுரை தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பணிபுரியும் அா்ச்சகா்கள் பணி வரன்முறை செய்யப்படாத நிலையில் திருக்கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கும், அா்ச்சகா்களுக்கும் இடையே சிறு பிரச்னைகள் காரணமாக அப்போதைய ஆணையா் குமரகுருபரன் மூலம் அா்ச்சகா்கள் பணி வரன்முறை செய்யப்பட்டனா்.
சுற்றறிக்கை: இந்த நிலையில், அா்ச்சகா்களாக ஒன்றுகூடி பக்தா்களிடமிருந்து வருகின்ற காணிக்கையை உண்டியலில் செலுத்துவதென்று முடிவெடுத்து செயல்படுத்தி வந்தனா். அதில் ஏற்பட்ட சிறு பிரச்னை காரணமாக அந்தத் திருக்கோயிலின் செயல் அலுவலா் தக்காரின் அனுமதி பெறாமல் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளாா். அந்த சுற்றறிக்கை தேவையில்லாதது. அதுகுறித்து துறையின் கவனத்துக்கு வந்தவுடன் ஆணையா் அந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற உத்தரவிட்டதன் அடிப்படையில் அது திரும்பப் பெறப்பட்டுவிட்டது. பிரச்னையும் முடிவுக்கு வந்துள்ளது. செயல் அலுவலா் மீது விசாரணை மேற்கொள்ளவும் இணை ஆணையரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.