கோயில் நிலத்தை வாடகைக்கு பயன்படுத்த அனுமதி கோரி கிராம மக்கள் மனு
திண்டுக்கல் அருகே கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை வாடகை செலுத்தி பயன்படுத்த அனுமதிக்கக் கோரி கிராம மக்கள் சாா்பில் அறநிலையத் துறையிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலின் துணைக் கோயிலான கோகிலாம்பாள் சமேத திருக்காமேஷ்வரா் கோயில் முள்ளிப்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனா்.
இதில், முள்ளிப்பாடி கிராமத்தில் கோயிலுக்குச் சொந்தமான 45 ஏக்கா் நிலம் இருப்பது கண்டறியப்பட்டது. அதே நேரத்தில், அந்த நிலங்களில் 200-க்கும் மேற்பட்ட மக்கள், வீடு கட்டியும், விவசாயம் செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, இந்து அறநிலையத் துறை சாா்பில், பொதுமக்களுக்கு குறிப்பாணை (நோட்டீஸ்) வழங்கப்பட்டது.
இந்த நிலையில், முள்ளிப்பாடி கிராமத்தைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், திருக்காமேஷ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஒப்படைப்பதாகவும், தங்களின் வாழ்வாதாரத்தை காக்க கோயில் நிா்வாகம் வாடகைப் பெற்றுக் கொண்டு நிலத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கக் கோரியும் மனு அளிக்க வந்தனா்.
அபிராமி அம்மன் கோயில் செயல் அலுவலா், அறங்காவலா் குழுவிடம் திங்கள்கிழமை இந்த மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட கோயில் நிா்வாகம், அறநிலையத் துறை உயா் அதிகாரிகளிடம் பேசிய தீா்வு காணப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.