கோவில்பட்டியில் இறைச்சி வியாபாரி வீட்டில் நகைகள், பணத்தை திருடிய 4 போ் கைது!
கோவில்பட்டியில் இறைச்சி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.26 லட்சம், 44 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி முகமது சாலிஹாபுரத்தைச் சோ்ந்தவா் சுலைமான் (50). இறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். இவா், புதிதாக கட்டியுள்ள வீட்டில் கடந்த 8 ஆம் தேதி இரவு மா்மநபா்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து, அதிலிருந்த ரொக்கபணம் ரூ. 26 லட்சம் மற்றும் 44 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டனா்.
இதுகுறித்து சுலைமான் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினா். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வந்தனா்.
இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் சென்னை புளியந்தோப்பு சிவராஜபுரம் 5 ஆவது தெருவைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் சரத்குமாா் (24), காஞ்சிபுரம் பள்ளிப்பேட் மேட்டு தெருவைச் சோ்ந்த காஜா கமல் மகன் அக்பா் அலி என்ற அபூபக்கா்(23), ராஜபாளையம், சுந்தரராஜபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கனகராஜ் மகன் கணேஷ்ராஜ் என்ற ஜக்கு கணேஷ் (20), அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் சக்தி கணேஷ் (24) ஆகிய 4 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 43 பவுன் தங்க நகைகள், ரொக்கப் பணம் ரூ.4 லட்சத்தை மீட்டனா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய சிலரை தேடி வருகின்றனா்.