அரசியலமைப்பை பாதுகாக்க முழுமூச்சுடன் செயல்படுவேன்: சுதர்சன் ரெட்டி
கோவையில் யானை தாக்கி ஒருவர் பலி!
கோவையில் யானை தாக்கி ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை, தொண்டாமுத்தூர் ஆட்டுக்கல் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த மருதாச்சலம், முருகன், சதீஷ் மற்றும் ராஜா என்ற சகாயம் ஆகிய நான்கு பேர் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெருமாள்முடி கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டுத் திரும்பினர்.
மேலும், அவர்கள் வரும் வழியில் ஊருக்குள் விற்பனை செய்ய, சீமாறு புல் சேகரித்து உள்ளனர். அப்போது அங்கு வந்த ஒற்றைக் காட்டு யானை இவர்களை துரத்தியது. அதில் மூன்று பேர் தப்பி ஓடிய நிலையில், மருதாச்சலம் மட்டும் யானையிடம் சிக்கினார்.
இந்த நிலையில், வனத் துறையினர் இன்று(ஆக. 24) காலை அங்கு சென்று தேடியபோது, மருதாச்சலத்தின் உடல் முகம் சிதைந்த நிலையில் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து தொண்டாமுத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடலை கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானை தாக்கி பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க: அருணாசலில் உண்டு உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: மாணவர் பலி, மூவர் காயம்