அரசியலமைப்பை பாதுகாக்க முழுமூச்சுடன் செயல்படுவேன்: சுதர்சன் ரெட்டி
ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்காது என தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு, கடந்த 20.2.2020 இல் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம், 2020ஐ இயற்றியதன் மூலம் காவிரி டெல்டா பகுதியினை , பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்தது.
இந்த சட்டத்தின் அடிப்படையில், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகள் ஆகிய டெல்டா பகுதிகளில் புதிதாக எரிபொருள், இயற்கை வாயு, நிலக்கரி மீத்தேன் மற்றும் ஷேல் வாயு போன்றவற்றின் இருப்பு குறித்த ஆராய்ச்சி, மற்றும் அகழ்வுத் தொழில்கள் ஆகியவை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது.
மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த தடை மயிலாடுதுறை மாவட்டத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இதற்கிடையில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி (ஓஎன்ஜிசி) நிறுவனமானது, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் இருப்பு குறித்து ஆய்வு செய்ய விண்ணப்பித்திருந்ததை தொடர்ந்து, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஓஎன்ஜிசி- க்கு சுற்றுச்சூழல் அனுமதியினை நேரடியாக வழங்கியுள்ள செய்தி தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
இதனை அடுத்து ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியினை உடனே திரும்ப பெறுமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தமிழ்நாட்டின் எந்த ஒரு பகுதியிலும், ஹைட்ரோகார்பன் தொடர்பான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே முதல்வர் மு.க.ஸ்டாலினின் திடமான கொள்கை முடிவாகும்.
எனவே, தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் நம் மாநிலத்தின் எந்த ஒரு பகுதியிலும் இத்திட்டங்களைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என திட்டவட்டமாக தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.