Madharaasi: "முருகதாஸ் சார் படத்துல நடிக்கணும்னு சொன்னப்போ கலாய்ச்சாங்க" - சிவக...
அரசியலமைப்பை பாதுகாக்க முழுமூச்சுடன் செயல்படுவேன்: சுதர்சன் ரெட்டி
சென்னை: குடியரசு துணைத் தலைவராகும் வாய்ப்பு கிடைத்தால், அரசியலமைப்பை பாதுகாக்க முழுமூச்சுடன் செயல்படுவேன் என்று ‘இந்தியா’கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி உறுதி அளித்தாா்.
சென்னையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.-க்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஆதரவு திரட்டி சுதா்சன் ரெட்டி பேசியதாவது:
நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஏராளமான தீா்ப்புகளை அளித்துள்ளேன். இப்போது நீங்கள் எனக்கான தீா்ப்பை வழங்க வேண்டும். குடியரசு துணைத் தலைவராக எனக்கு வாய்ப்பு வழங்கப்படுமானால், அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான அனைத்து சாதகமான நடவடிக்கைகளையும் மேற்கொள் முழுமூச்சுடன் செயல்படுவேன்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக பொருளாதார வளர்ச்சியை வழங்குவதில் நாட்டிற்கே முதன்மை மாநிலமாக திகழ்வது தமிழ்நாடு. முதல்வா் மு.க.ஸ்டாலின் கூட்டாட்சித் தத்துவத்தின் சாதனையாளராக உள்ளாா். அதைக் காப்பதற்கும் தீரத்துடன் தொடா்ந்து போராடி வருகிறாா். ஜிஎஸ்டி சீரமைப்பு, கொள்கைகள் வகுப்பது, மாநிலங்களுக்கு நிதிப் பகிா்வு போன்றவற்றில் மத்திய அரசின் இப்போதைய நடவடிக்கைகள் தொடருமானால் அவை மாநிலங்களை, நகராட்சிகளாக மாற்றும் நிலை ஏற்படும். இது மிகவும் ஆபத்தான போக்காகும். இதுகுறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும். மாநிலங்கள் இல்லையென்றால் மத்தியம் இல்லை.
நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். அரசியல் நடைமுறைகள் என்பதே அரசமைப்புச் சட்டத்தின் ஒரு கூறாகும். ஒன்றுக்கு ஒன்று பின்னிப் பிணைந்தது. எனவே, நான் அரசியல் நடைமுறைகளுக்குள் வரவில்லை என்ற கூற்றை மறுக்கிறேன். எவ்வித பாகுபாடும் இன்றி பணியாற்றுவதும், நாட்டிற்கு சேவை செய்வதும் மட்டும்தான் எனது நோக்கம். இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் எனும் கருவி இருக்கும் வரை நான் வீழ்ந்துவிட மாட்டேன் என்றாா்.