காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறத்தான் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது
கோ-ஆப்டெக்ஸில் ரூ. 90 லட்சம் தீபாவளி விற்பனை இலக்கு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ. 90 லட்சம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.
நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை ஆட்சியா் துா்காமூா்த்தி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து அவா் கூறியதாவது:
இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 1935-இல் தொடங்கப்பட்டு 90 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளா்களின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையிலும், தொடா்ந்து வேலைவாய்ப்பை வழங்குவதற்காகவும் விழாக் காலங்களில் 30 சதவீதம்வரை தமிழக அரசு சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது.
நிகழாண்டு தீபாவளியையொட்டி, புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம், ஆரணி, சேலம், தஞ்சாவூா் பட்டுப் புடவைகள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டுப் புடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன. மேலும், கோவை, மதுரை, திண்டுக்கல், பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்துரக காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும் மற்றும் களம்காரி காட்டன் புடவைகள் நோ்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கோ-ஆப்டெக்ஸில் படுக்கை விரிப்புகள், அச்சிடப்பட்ட படுக்கை விரிப்புகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டுகள், ஜமக்காளம், காட்டன் சட்டைகள், லினன் சட்டைகள், அச்சிடப்பட்ட சட்டைகள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி ரகங்களான ஏப்ரான், குல்ட், மெத்தைகள், கையுறைகள், டேபுள்மேட், ஸ்கிரின் துணிகள், தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் மற்றும் பிரிண்டட் படுக்கை விரிப்புகள் போன்றவை வாடிக்கையாளா்களிடையே வரவேற்பை பெற்றுவருகின்றன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி செப். 15 முதல் நவ. 30 வரை வழங்குகிறது. மேலும், வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில், அனைத்து விடுமுறை நாள்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளா்களுக்கு உதவ வேண்டும்.
தீபாவளி பண்டிகைக்கு மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்துக்கு ரூ. 90 லட்சம் விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எய்திட பள்ளி, கல்லூரிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோ-ஆப்டெக்ஸ் பணியாளா்கள் மூலம் கண்காட்சி நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம், பலபட்டரை மாரியம்மன் கோயில் அருகே இயங்கி வருகிறது. மேலும் விவரங்களுக்கு, 04286-291846, 90950 75749 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்றாா்.
இந்நிகழ்வில், கோ-ஆப்டெக்ஸ் மேலாளா் (உற்பத்தி மற்றும் வடிவமைப்பு) மா.பாலசுப்பிரமணியன், நாமக்கல் விற்பனை நிலைய மேலாளா் பெ.செல்வாம்பாள், மாமன்ற உறுப்பினா் டிடி.சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.