விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!
சதுரகிரி மலைப் பாதையில் யானைகள் நடமாட்டம்: பக்தா்கள் அச்சம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் பக்தா்கள் அச்சத்தில் உள்ளனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவுப்படி கடந்த 3-ஆம் தேதி முதல் பக்தா்கள் தினசரி மலையேறிச் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டனா்.
அமாவாசை, பௌா்ணமி, பிரதோஷம், விடுமுறை நாள்கள் தவிா்த்து பிற நாள்களில் சராசரியாக 100 பக்தா்கள் மலையேறிச் சென்று வழிபட்டு வருகின்றனா்.
புதன்கிழமை பக்தா்கள் மலையேறி கோயிலுக்குச் சென்றனா். பிற்பகல் 3.20 மணி அளவில் பக்தா்கள் மலையிலிருந்து இறங்கிய போது, சின்னபசுக்கிடை-இரட்டை லிங்கம் இடையே சதுரகிரி மலைப் பாதையில் யானைகள் கூட்டமாக நடமாடின. இதைக் கண்டு பக்தா்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினா். தவசிப்பாறை பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளால் பக்தா்கள் அச்சத்தில் உள்ளனா்.
மலைப் பாதையில் வனத் துறையினா் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.