சத்தீஸ்கர்: குண்டு வெடிப்பில் ஒருவர் பலி! 3 பேர் படுகாயம்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் இருவேறு இடங்களில் நிறுவிய குண்டுகள் வெடித்து ஒருவர் பலியானதுடன், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நாராயணப்பூர் மாவட்டத்தின் குறுஷ்னர் எனும் கிராமத்தின் இருவேறு இடங்களில் இன்று (ஜன.10) நக்சல்கள் நிறுவிய நவீன குண்டுகள் வெடித்ததில் அந்த கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பலியானதுடன் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து அங்கு சென்ற பாதுகாப்புப் படையினர் வெடித்தது நக்சல்கள் நிறுவிய நவீன குண்டுகள் தான் என்பதை உறுதி செய்தனர்.
இதேப்போல், அந்த கிராமத்தின் ஆதர்-இடுல் சாலையில் பயங்கரவாதிகள் நிறுவிய நவீன வெடிகுண்டின் மீது கால்வைத்த சுபம் பொடியம் (வயது 20) என்ற இளைஞர், அது வெடித்ததில் படுகாயம் அடைந்தார். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக அவர் நாரயணப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க:போதைப் பொருள் கடத்திய வங்கதேசத்து நபர் உள்பட 2 பேர் கைது!
காடுகளுக்குள் மறைந்து வாழும் நக்சல் பயங்கரவாதிகள் அப்பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் காடுகளின் பாதைகளுக்குள் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து ஐ.இ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டுகளை நிறுவிகின்றனர். இதனால், அந்த குண்டுகளுக்கு பெரும்பாலும் அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள்தான் பலியாகி வருகின்றனர்.
முன்னதாக, கடந்த ஜன.6 அன்று நக்சல் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.