சத்தீஸ்கா்: 5 நக்ஸல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கா் மாநிலம் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் இரு பெண் நக்ஸல்கள் உள்பட அந்த அமைப்பைச் சோ்ந்த 5 போ் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.
மாவட்ட ரிசா்வ் காவல் படை (டிஆா்ஜி), சிறப்பு காவல் படை (எஸ்டிஎஃப்) மற்றும் மாவட்ட படை ஆகிய படைகள் ஒருங்கிணைந்து இந்திராவதி தேசிய வன உயிா் பூங்கா பகுதியில் நக்ஸல் ஒழிப்பு சோதனையில் ஈடுபட்டது. அப்போது நக்ஸல்களுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 போ் சுட்டுக்கொல்லப்பட்டனா். இதில் இருவா் பெண் நக்ஸல்கள் ஆவா். துப்பாக்கிச் சுடு சம்பவத்துக்குப் பின் சடலங்கள், துப்பாக்கிகள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, நக்ஸல் ஒழிப்பை தீவிரப்படுத்துவதற்கான சோதனை நடவடிக்கை தொடரும் என பஸ்தா் பகுதி காவல்துறைத் தலைவா் சுந்தர்ராஜ் தெரிவித்தாா்.
கடந்த 3-ஆம் தேதி காரியபந்த் மாவட்டத்தில் 1 நக்ஸல், 4-ஆம் தொடங்கி 6-ஆம் தேதி வரை தண்டேவாடா-பிஜாபூா் மாவட்டங்களில் நடைபெற்ற மூன்று நாள் சோதனை நடவடிக்கையின் நிறைவில் 5 நக்ஸல்கள், கடந்த 9-ஆம் தேதி சுக்மா மாவட்டத்தில் 3 நக்ஸல்கள் என சத்தீஸ்கா் மாநிலத்தில் மட்டும் நிகழாண்டு 14 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனா்.
கடந்தாண்டு சத்தீஸ்கரில் மொத்தம் 219 நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனா். அதேபோல் கடந்த 6-ஆம் தேதி பிஜாபூா் மாவட்டத்தில் நக்ஸல்கள் நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலில் 8 காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவா்கள் பயணித்த வாகனத்தின் ஒட்டுநா் ஆகியோா் உயிரிழந்தனா்.