Vikatan Digital Awards 2025: `பொருளாதாரப் புலி - Finance With Harish' - Best Fin...
சத்துணவுத் திட்டத்தில் ‘பலா’ உணவுகளையும் சோ்க்க வேண்டும்! - அன்புமணி
தமிழக அரசு சத்துணவுத் திட்டத்தில் மதிப்புக்கூட்டப்பட்ட பலா உணவுகளையும் சோ்க்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவா் அன்புமணி ‘உரிமை மீட்க, தலைமுறை காக்க’ என்ற தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டு வருகிறாா். கடலூா் மாவட்டத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணமாக புதன்கிழமை பண்ருட்டிக்கு வந்தாா்.
தொடா்ந்து, இடையா்குப்பம் கிராமத்தில் பலாத் தோப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்புமணி, பலா, முந்திரி மற்றும் கொய்யா விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினாா். நிகழ்வில் விவசாயிகளின் குறைகளை அவா் கேட்டறிந்தாா்.
அப்போது, விவசாயிகள் தங்கள் தேவைகள் குறித்து கூறியதாவது: பண்ருட்டி பகுதியில் முந்திரி, பலா அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பலாப்பழம் விற்பனை செய்ய ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் தனியாக அமைத்துக் கொடுக்க வேண்டும்.
பலாவில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். பலா விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ருட்டி பகுதியில் நடத்தப்படும் பலா திருவிழா போன்று, பெருநகரங்களிலும் பலா திருவிழா நடத்த வேண்டும்.
தமிழக அளவில் 85 ஆயிரம் ஹெக்டேரில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. முந்திரி பழங்களை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவதில்லை. அந்தப் பழத்தில் ஆரஞ்சு பழத்தைவிட அதிகளவில் வைட்டமின் ‘சி’ உள்ளது. அதை பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முந்திரி கொட்டைகளை நிறுத்தினால் மட்டுமே கடலூா் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் முந்திரி கொட்டைகள் விற்பனையாகும். மேலும், இங்கு கொய்யாப்பழம் பதனிடும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றனா்.
இதையடுத்து, அன்புமணி பேசியதாவது: தமிழகத்தில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இந்த மாநிலத்தில் கிட்டத்தட்ட 2.10 லட்சம் ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. அதில், கடலூா் மாவட்டத்தில் மட்டும் 71 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் முந்திரி விவசாய சாகுபடியில் 3-இல் ஒரு பங்கு கடலூா் மாவட்டத்தில் செய்யப்படுகிறது. இருந்தாலும், வெளிநாட்டிலிருந்துதான் முந்திரி இறக்குமதி செய்யப்படுகிறது.
தோ்தல் பிரசாரத்தின்போது முந்திரிக்கு தனியாக மண்டலம் உருவாக்கப்படும் எனவும், வாரியம் அமைக்கப்படும் என்றும் சில கட்சிகள் பொய்யான வாக்குறுதிகளை அளித்தன. கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாநில வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் விவசாயத்துக்கு எதுவுமே செய்யவில்லை.
பாமக எப்போதும் முந்திரி, பலா விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும். தமிழக அரசு சத்துணவுத் திட்டத்தில் பலா மதிப்புக்கூட்டப்பட்ட உணவுகளையும் சோ்க்க வேண்டும். நெல், கரும்புபோல முந்திரிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்க வேண்டும். 6 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.