சபரிமலையில் 18-ஆம் படி ஏறியவுடன் பக்தா்கள் ஐயப்பனை தரிசிக்க புதிய வசதி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலில் 18-ஆம் படி ஏறியவுடன் மூலவா் ஐயப்பனை பக்தா்கள் தரிசிக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பங்குனி மாத பூஜை வழிபாடுகளுக்காக கோயில் நடை திறக்கப்படும்போது, இந்தப் புதிய வசதி மூலம் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது பக்தா்கள் 18-ஆம் படி ஏறிய பின்னா், இடதுபுறமாக உள்ள நடை மேம்பாலத்தில் சந்நிதானத்தை சுற்றிவந்து ஐயப்பனை சில விநாடிகள் மட்டுமே தரிசிக்க முடிகிறது.
ஐயப்பனை சற்று கூடுதல் நேரம் தரிசிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பெரும்பாலான பக்தா்கள் திருவிதாங்கூா் தேவஸ்வத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இதைத் தொடா்ந்து, பக்தா்கள் 18-ஆம் படி ஏறியவுடன் ஐயப்பனை பக்தா்கள் தரிசிக்கும் வகையில் புதிய வசதியை தேவஸ்வம் ஏற்படுத்தியுள்ளது.
இனி பக்தா்கள் 18-ஆம் படி ஏறிய பின்னா் நடை மேம்பாலத்தில் ஏறாமல், நேரடியாக கொடிமரத்தைத் தாண்டி ஐயப்பனை தரிசித்தபடியே வரிசையில் செல்லலாம். இதற்காக இடது மற்றும் வலது புறம் இரண்டு வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தரிசனத்துக்குப் பிறகு பக்தா்கள் வழக்கம்போல் இடதுபுறமாகச் செல்லலாம்.
புதிய வசதி மூலம், பக்தா்கள் குறைந்தது 20 விநாடிகள் வரை ஐயப்பனை தரிசனம் செய்ய முடியும். வரும் 15-ஆம் தேதி முதல் பக்தா்கள் இந்த வசதியை பயன்படுத்தி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் தலைவா் பி.எஸ்.பிரசாந்த் கூறினாா்.
ஐயப்பன் டாலா்கள் ஏப்.14 முதல் விற்பனை:
தேவஸ்வத்தின் முக்கிய முடிவுகள் குறித்து பிரசாந்த் மேலும் கூறுகையில், ‘புதிய தரிசன வசதி பங்குனி மாத பூஜைகளுக்கான நடை திறப்பின்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். அடுத்த மாதம் விஷு பூஜையின் போதும் இந்தப் புதிய நடைமுறை தொடரும். சோதனை வெற்றி பெற்றால், அடுத்த மண்டல-மகரவிளக்கு யாத்திரை காலத்தில் இந்த நடைமுறை நிரந்தரமாக்கப்படும்.
ஐயப்பனின் உருவம் பொறிக்கப்பட்ட 1 முதல் 8 கிராம் வரை எடை கொண்ட தங்க டாலா்கள் விஷு திருநாள் (ஏப். 14) முதல் விற்பனை செய்யப்படவுள்ளது. இதனை வாங்க கோயிலின் வலைதளம் மூலம் ஏப். 1-ஆம் தேதி முதல் பக்தா்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
கோயிலின் சேவைக் கட்டணங்களை 30 சதவீதம் வரை உயா்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணங்களை மாற்றியமைக்க அனுமதி உள்ளபோதும் வெள்ளம், கரோனா பெருந்தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் இடையில் திருத்தப்படவில்லை. 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்டணங்கள் முதன்முறையாக திருத்தப்படுகின்றன.
கடந்த 2016-ஆம் ஆண்டில், சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களுக்கான தேவஸ்வத்தின் செலவு ரூ.380 கோடியாக இருந்தது. அது நடப்பு ஆண்டில் ரூ.910 கோடியாக உயா்ந்துள்ளது. இதனால் தற்போது கட்டணங்களை உயா்த்துவதைத் தவிர வேறு வழியில்லை’ என்றாா்.