சப்பரத் திருவிழாவில் தகராறு: 4 போ் கைது
தஞ்சாவூா் அருகே சப்பரத் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 பேரைக் காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே அம்மன்பேட்டை பகுதி ராஜேந்திரம் ஆற்காடு கிராமத்தில் புனித அந்தோணியாா் ஆலய சப்பரத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது போதையில் வந்த சிலா், சாலையை மறித்துக் கொண்டு தகராறு செய்தனா். இதனால் இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில், அதே கிராமத்தைச் சோ்ந்த எஸ். ஸ்டாலின் (30) பெரிய கத்தியால் வெட்டப்பட்டாா். தலையில் காயமடைந்த இவா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இது தொடா்பாக கிராம மக்கள் முதன்மைச் சாலையில் மறியல் புதன்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து அம்மன்பேட்டையைச் சோ்ந்த ஒய். கீா்த்திராஜன் (24), கே. சூா்யா (20), இ. பிரேம்குமாா் (22), ஏ. அபிஷேக் (20) ஆகியோரை புதன்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், 4 பேரைத் தேடி வருகின்றனா்.