சிவகங்கை மாவட்டம்: பிளஸ் 1 தோ்வில் 94.79 % மாணவ, மாணவிகள் தோ்ச்சி!
இந்திய ராணுவத்தை அவமதிக்கும் பாஜக! காங்கிரஸ் குற்றச்சாட்டு!
இந்திய ராணுவத்தினரை பாஜகவினர் தொடர்ந்து அவமதித்து வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இந்தத் தாக்குதலால், பாகிஸ்தானில் பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்ட நிலையில், போரை நிறுத்திக்கொள்ள பாகிஸ்தான் முன்வந்தது.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்காக பிரதமருக்கு ராணுவத்தினர் தலைவணங்க வேண்டும் என்று பாஜக தலைவர் கூறியிருப்பது, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து, மத்திய பிரதேச துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்தா கூறியதாவது, ``நாங்கள் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். ஒட்டுமொத்த நாடும், ராணுவமும், ராணுவ வீரர்களும் பிரதமர் நரேந்திர மோடியின் பாதங்களை தலைவணங்குகிறார்கள்’’ என்று தெரிவித்தார்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், ராணுவம் குறித்த வெட்கக்கேடான கருத்தை இந்தியரான துணை முதல்வர் தேவ்தா கூறுகிறார். அவரது கருத்தை இந்தியர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார். அவரது கருத்துக்கு நாங்களும் கைகட்டிக் கொண்டிருக்க மாட்டோம். ராணுவத்தினருக்கு ஒட்டுமொத்த நாடும் நன்றி கடமைப்பட்டுள்ளது. நமது எதிரிகளுக்கு அவர்கள்தான் பாடம் கற்பித்துள்ளனர்.
அவர்கள்தான் பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்துள்ளனர். பாகிஸ்தானை அவர்கள்தான் பணிய வைத்துள்ளனர். எல்லையைப் பாதுகாப்பது மட்டுமில்லாமல், நாட்டின் ஒருமைப்பாட்டையும் காக்கின்றனர். தேவ்தாவின் கருத்துக்காக அவரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை கோருகிறோம். அவ்வாறு இல்லையெனில், பிரதமரின் அனுமதியுடன்தான் தேவ்தாவின் கருத்து தெரிவிக்கப்பட்டதாய் ஏற்றுக் கொள்ளப்படும்.’’ என்று தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்ததாவது, ``பாஜக தலைவர்கள், நமது ராணுவத்தை தொடர்ந்து அவமதிப்பது மிகவும் வெட்கக்கேடானது. முன்னதாக, ராணுவ வீராங்கனை குறித்து பாஜக அமைச்சர் அவமதித்தார். தற்போது, ராணுவத்தை மற்றொருவர் அவமதிக்கிறார். இந்திய ராணுவம் குறித்து, நாட்டு மக்கள் பெருமிதம் கொள்கின்றனர்;
ஆனால், அத்தகைய ராணுவத்தினரை பாஜகவினர் அவமதிக்கின்றனர். அவமதிப்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்குப் பதிலாக, அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில்தான் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம், நாட்டுக்கும் ராணுவத்துக்கும் பாஜக என்ன கூறுகிறது?’’ என்று கூறினார்.
भाजपा के नेताओं की ओर से लगातार हमारी सेना का अपमान अत्यंत शर्मनाक और दुर्भाग्यपूर्ण है। पहले मध्य प्रदेश के एक मंत्री ने महिला सैनिकों पर अभद्र टिप्पणी की और अब उनके उपमुख्यमंत्री ने सेना का घोर अपमान किया है।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 16, 2025
पूरे देश की जनता सेना के शौर्य पर गौरवान्वित है लेकिन भाजपा के लोग…
முன்னதாக, மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷா தெரிவித்த கருத்துகளும் பெரும் சர்ச்சையானது. 'பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களை, அவா்களின்(பயங்கரவாதிகளின்) சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித்துவிட்டார்’ என்று விஜய் ஷா கூறியிருந்தார்.
கா்னல் சோஃபியா குரேஷி இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்தவா் என்பதால் அவரைத் பயங்கரவாதிகளின் சகோதரி எனச் சித்திரிக்கும் வகையில் அமைச்சா் பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அதற்காக மன்னிப்பு கோரத் தயாராகவும் இருப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில், பாஜக தலைவர்களின் கருத்துகள், ராணுவத்தை அவமதிக்கும்வகையில் இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.