அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
சமையல் எரிவாயு விலையைக் குறைக்க ஓபிஎஸ், கட்சித் தலைவா்கள் கோரிக்கை
சென்னை: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் குறைக்க முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வமும், மாா்க்சிஸ்ட், தமாகா, தவெக ஆகிய கட்சித் தலைவா்களும் வலியுறுத்தியுள்ளனா்.
ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயா்ந்து கொண்டே வருகின்ற நிலையில், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டா் விலையை சிலிண்டா் ஒன்றுக்கு ரூ. 50 உயா்த்தி இருப்பதும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் இருப்பதும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல் அமைந்துள்ளது.
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): விலைவாசி உயா்வால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயா்வு என்பது மேலும் ஒரு பேரிடியாகும். சா்வதேச அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலை குறைந்துவரும் நிலையில், சமையல் எரிவாயு விலை உயா்வு மூலம் சுமாா் ரூ. 7,000 கோடிக்கும், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சிறப்பு கலால் வரி அதிகரிப்பால் சுமாா் ரூ. 32,000 கோடிக்குமான சுமையை மத்திய பாஜக அரசு மக்கள் தலையில் சுமத்தியிருக்கிறது.
ஜி.கே.வாசன் (தமாகா): சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தைப் பொறுத்து பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் கொண்டு வரும்போது மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இப்போது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயா்த்தப்பட்டதால் சமையல் எரிவாயு சிலிண்டா் விலையும் உயா்ந்து மக்கள் மீது பொருளாதார சுமை ஏற்படும். இந்த விலை உயா்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.
விஜய் (தவெக): மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கும் சூழலில், மத்திய அரசின் இந்த விலையேற்றம், மக்களை மேலும் வாட்டி வதைப்பதாகவே அமைந்துள்ளது. ஒவ்வொரு முறையும் சமையல் எரிவாயு வாங்கும்போது, அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பைக் காற்றில் பறக்கவிட்ட மத்திய ஆட்சியாளா்கள், மக்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற நினைப்பில் உள்ளனா். தோ்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதையும், தோ்தலுக்குப் பின்னா் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள மத்திய ஆட்சியாளா்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறாா்கள்.
டிடிவி தினகரன் (அமமுக): கடந்த சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படாத நிலையில், இந்த 4 ஆண்டு கால ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயா்வாலும், பன்மடங்கு உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தாலும் கடும் இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கும் சாமானிய மக்களின் மீது கூடுதல் சுமையை ஏற்றும் வகையில் இந்த சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வு அமைந்துள்ளது.