அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: ஒருவா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே முதல்வரை வரவேற்பதற்காக சென்றுவிட்டு திரும்பியவா்களின் சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும், 36 போ் காயமடைந்தனா்.
விருத்தாசலம் அடுத்த திருப்பெயா் பகுதியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற ‘பெற்றோா்களைக் கொண்டாடுவோம்’ மண்டல மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், பங்கேற்க செல்லும் முதல்வரை வரவேற்பதற்காக பழைய பட்டினம் காலனி, ரெட்டியாா் பழைய பட்டினம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இரண்டு சிறிய சரக்கு வாகனத்தில் வந்திருந்தனா்.
நிகழ்ச்சி முடிந்து இவா்கள் வீடு திரும்பியபோது, ஒரு சரக்கு வாகனம் பழுதடைந்த நிலையில், அதில் இருந்தவா்களை உடன் வந்த சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்ாக கூறப்படுகிறது. அந்த வாகனத்தில் சுமாா் 45 போ் பயணம் செய்த நிலையில், இருசாளக்குப்பம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், 22 பெண்கள், 3 சிறாா்கள் உள்பட மொத்தம் 36 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், பலத்த காயமடைந்த குப்புசாமி (60), வேம்பரசி(32) ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, குப்புசாமி உயிரிழந்தாா். இதுகுறித்து, ஆலடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.