சவுக்கு சங்கருக்கு பிடிஆணை
கஞ்சாவைப் பதுக்கியது தொடா்பான வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகாத சமூக ஊடகவியலாளா் சவுக்கு சங்கருக்கு எதிராக மதுரை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிடிஆணை பிறப்பித்தது. இதையடுத்து, அவா் சென்னையில் கைது செய்யப்பட்டாா்.
காவல் துறை அதிகாரிகள், பெண் காவலா்கள் குறித்து அவதூறு பேசியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவுக்கு சங்கரை கோவை போலீஸாா், தேனியில் கைது செய்தனா். அப்போது, அவா் தங்கியிருந்த அறையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக, தேனி மாவட்டம், பழனி செட்டிப்பட்டி போலீஸாா் சவுக்கு சங்கா் மீது கஞ்சா பதுக்கல் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை மதுரை போதைப் பொருள்கள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அண்மைக்காலமாக இந்த வழக்கு விசாரணைக்கு சவுக்கு சங்கா் சரிவர முன்னிலையாகவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவா் மீதான வழக்கு நீதிபதி செங்கமலச்செல்வன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, சவுக்கு சங்கா் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அவா் சாா்பில் வழக்குரைஞா் முன்னிலையாகி மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை நிராகரித்த நீதிபதி செங்கமலச்செல்வன், குற்றஞ்சாட்டப்பட்ட சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிஆணை பிறப்பித்தாா்.
சென்னையில் கைது....
இதுகுறித்த தகவல் தேனி மாவட்ட போலீஸாா் மூலம் சென்னை போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸாா் சவுக்கு சங்கரை செவ்வாய்க்கிழமை பிற்பகல் கைது செய்தனா். அவரை, பழனி செட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் சென்னையிலிருந்து மதுரைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவா் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.