இந்திய அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட்! பும்ரா-ஆகாஷ் வேகத்தில் ஆஸி. அணி திணறல்!
கண்மாய் ஆக்கிரமிப்புகளை 3 மாதங்களில் அகற்ற உத்தரவு
கண்மாய் ஆக்கிரமிப்புகளை 3 மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், முதுவன்திடல் பகுதியைச் சோ்ந்த கண்ணன் தாக்கல் செய்த மனு: திருப்புவனம் அருகே உள்ள முத்துவன்திடல் கிராமத்தில் உள்ள பெரிய கண்மாய், திருமனேந்தல் கண்மாய், சின்னக் கண்மாய் ஆகியவை விவசாயத்துக்கும், குடிநீருக்கும் ஆதாரமாக உள்ளன. இந்தக் கண்மாய்களை எங்களது ஊரைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்து, தென்னை மரங்களை நடவு செய்துள்ளனா். அவா்களுக்குச் சொந்தமான விளை நிலங்களுக்கு கண்மாய் நீரை மோட்டா் வைத்தும் உறிஞ்சுகின்றனா். இதனால், கண்மாயில் நீரைத் தேக்க முடியவில்லை. பாசனப் பகுதிகளில் விவசாயமும் முழுமையாகப் பாதிக்கப்படும். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, கண்மாய் ஆக்கிரமப்புகளை அகற்றி அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு சென்னை உயா்நீதிமன்ற ஆக்கிரமிப்புகள் அகற்றும் சிறப்பு அமா்வு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், பி.புகழேந்தி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் கூறியதாவது: மனுதாரா் குறிப்பிடும் கண்மாய்கள் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமானவை. இவற்றை சிலா் ஆக்கிரமிப்புகள் செய்திருப்பது தெரியவந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நீா்நிலைகள், கண்மாய்ப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருக்கும்பட்சத்தில் உரிய விதிகளைப் பின்பற்றி ஆக்கிரமிப்பாளா்களுக்கு குறிப்பாணை அனுப்ப வேண்டும். கண்மாய் குறித்து முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை 3 மாதங்களுக்குள் அகற்ற வேண்டும். வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.