"சாதி வாரிக் கணக்கெடுப்பு... இல்லையெனில் தமிழ்நாடே கலவர பூமியாகும்" - அன்புமணி காட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் 'தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசிய தேவைகள்' குறித்த கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் , தமிழ்நாட்டின் 69% இட ஒதுக்கீட்டிற்கு வந்திருக்கும் ஆபத்தை எடுத்துரைத்து, 'தி.மு.க' அரசை எச்சரித்துள்ளார் அன்புமணி ராமதாஸ். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், " பிகார் முதலமைச்சர் நிதீஸ் குமார் சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்துக் காட்டினார். இங்கு தமிழ்நாட்டில் தமிழக அரசிற்கு உட்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சியில் இருக்கும் 'தி.மு.க' சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறது. தமிழ்நாட்டு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் எப்போது வேண்டுமானாலும் எடுத்து விசாரிக்கும். அப்போது சாதி வாரிக் கணக்கெடுக்கு எடுக்காமல் இருந்தால் தமிழ்நாட்டின் 69% இட ஒதுக்கீட்டின் நிலை என்னவாகும்?
சாதிவாரிக் கெடுப்பு எடுக்காவிட்டால், உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டின் 69% இட ஒதுக்கீட்டை ரத்து, 50% இட ஒதுக்கீடு என குறைத்துத் தீர்ப்பு வழங்க நேரிடும். அப்படி ஒன்று நடந்தால் தமிழ்நாடு என்ன ஆகும்?
நாங்கள் அதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். தமிழ்நாடே கலவர பூமியாக மாறும். அடுத்த நாளே 'தி.மு.க' ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். தமிழ்நாட்டின் 69% இட ஒதுக்கீட்டிற்கு வந்திருக்கும் இந்த ஆபத்தை உணர்ந்து 'தி.மு.க' அரசு உடனடியாக சாதி வாரிக் கணக்கெடுப்பை எடுக்க வேண்டும்" என்று 'தி.மு.க' அரசை எச்சரித்துப் பேசியிருக்கிறார்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!