Vijay: சினுக்கு சினுக்கு சின் சச்சின்..! 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீரிலீஸ் சச்சின...
இறுதிச் சடங்கில் ஊழியரின் சடலத்தை சுமந்துசென்ற பிரபல தொழிலதிபர்!
அபுதாபியில் மாரடைப்பால் உயிரிழந்த தனது ஊழியரின் சடலத்தை லூலூ குழுமத் தலைவர் யூசப் அலி சுமந்து சென்றார்.
அபுதாபியை தலைமையிடமாக கொண்ட லூலூ குழுமத்துக்கு 23-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகள் உள்ளன. இந்தியாவிலும் பல்வேறு நகரங்களில் லூலூ வணிக வளாகங்கள் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அபுதாபியில் அல் வஹ்தா வணிக வளாகத்தில் உள்ள லூலூ ஹைபர் மார்ட்டில் மேற்பார்வையாளராக பணிபுரிந்த கேரளத்தைச் சேர்ந்த ஷிஹாபுதீன் என்பவர், கடந்த வாரம் மாரடைப்பால் பலியானார்.
இதையும் படிக்க : பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு கெடு விதித்த டிரம்ப்!
அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முடியாத நிலையில், அபுதாபியிலேயே இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில், நேரில் கலந்துகொண்ட யூசப் அலி பிரார்த்தனை மேற்கொண்டதுடன், அவரின் சவப்பெட்டியை தோளில் சுமந்து சென்றார்.
இந்த காணொலியை அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து யூசப் அலி இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அவரது செயலுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
கேரளத்தை பூர்விகமாக கொண்ட யூசப் அலி, முன்னதாக கேரளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு உதவி செய்ததன் மூலம் அனைவராலும் பாராட்டப்பட்டார்.
எர்ணாகுளத்தைச் சேர்ந்த தம்பதி, கடந்த 2019ஆம் ஆண்டில் வீடு கட்டுவதற்காக நிதி நிறுவனத்திடம் ரூ. 4 லட்சம் கடன் பெற்றிருந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், அவரது கணவர் வீட்டைவிட்டு சென்றுவிட்டார்.
வட்டியுடன் கடன் தொகை ரூ. 8 லட்சத்தை எட்டிய நிலையில், நிதி நிறுவனத்தினர் வீட்டை பறிமுதல் செய்தனர். இந்த செய்தி அறிந்த யூசப் அலி, பாதிக்கப்பட்ட பெண்ணின் கடனை அடைத்ததுடன், அவருக்கு ரூ. 10 லட்சம் நிதியும் வழங்கி உதவினார்.
இந்த உதவியின் மூலம் பிரபலமான யூசப் அலி, தனது ஊழியரின் இறுதிச் சடங்கில் பங்கேற்று சவப்பெட்டியை சுமந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.