நமக்குள்ளே... 30, 40, 50 வயதுகளில் வீட்டுக்குள் காதல்... இருக்கா, இல்லையா?
Delhi: ``முஸ்தஃபாபாத் தொகுதியின் பெயரை `ஷிவ்புரி' என மாற்றுவேன்'' -பாஜக மோகன் சிங்
சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் முஸ்தஃபாபாத் தொகுதியில் வெற்றி பெற்ற மோகன் சிங் பிஷ்ட், முஸ்தஃபாபாதை 'ஷிவ்புரி' அல்லது ஷிவ் விஹார் என பெயர் மாற்றம் செய்வது குறித்து மீண்டும் வலியுறுத்தினார்.
பாஜக வேட்பாளரான மோகன் சிங் பிஷ்ட், 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் முஸ்தஃபாபாத் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 17,578 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தனது வெற்றி குறித்து பேசிய மோகன் சிங் பிஷ்ட், "நான் வெற்றி பெற்றால் முஸ்தஃபாபாத் தொகுதியின் பெயரை 'ஷிவ்புரி' அல்லது 'ஷிவ் விஹார்' என மாற்றுவதாய் கூறியிருந்தேன். நான் அதைச் செய்வேன். வளர்ச்சிப் பணிகள் பெயருக்கு சம்பந்தமாக இல்லை. 1998 முதல் 2008 வரை இப்பகுதியில் வளர்ச்சிப்பணிகளை நான் செய்ததால், நிச்சயம் பெயரை மாற்றிவிடுவேன்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/3rfphbx3/6783e8a795a17-mohan-singh-bishth-120657709-16x9.jpg)
ஒரு பக்கம் 58% மக்கள் தொகை மற்றும் மறுபக்கம் 42 சதவீத மக்கள் தொகை இருக்கும் நிலையில், 58 சதவீத மக்களை கௌரவிப்பதே நியாயமானது. எனவே முஸ்தஃபாபாத் பகுதி, 'ஷிவ் விஹார்' அல்லது 'ஷிவ்புரி' என பெயர் மாற்றம் செய்யப்படும்" என கூறினார். மேலும், இந்துக்கள் வாழும் பகுதிக்கு முஸ்தஃபாபாத் என்பதற்குப் பதிலாக 'ஷிவ்புரி' அல்லது 'ஷிவ் விஹார்' என ஏன் பெயரிட இயலாது" எனவும் கேள்வி எழுப்பினார்.
டெல்லி மாநிலத்தில் வளர்ச்சி இல்லை என விமர்சித்த மோகன் சிங், அடிப்படை வசதிகளை மேம்படுத்த முறையாக நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாகவும் உறுதியளித்தார். இது குறித்து பேசிய அவர், "டெல்லியில் வளர்ச்சிக்கான அறிகுறிகளே இல்லை. குடிநீர், சாலை வசதி, பள்ளிகள் மேம்பாடு, பூங்காக்கள் பராமரிப்பு, போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை சீரமைக்க கடுமையாக உழைப்பேன்" என குறிப்பிட்டார்.
முஸ்தாஃபாபாத் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதி என கூறப்படும் நிலையில், இத்தொகுதியின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 30%-40% முஸ்லீம் மக்களே வசிக்கின்றனர். அதிக முஸ்லிம் மக்கள்தொகையுடைய வடகிழக்கு டெல்லியில் அமைந்துள்ள முஸ்தஃபாபாத் தொகுதி, 2020 கலவரத்தின் போது மிக அதிக பாதிப்புக்குட்பட்ட பகுதிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.